5ஜி தொழில்நுட்பம் இப்போதுதான் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கைபேசிகளுக்கான 6ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான திட்டத்தை சிங்கப்பூர் உருவாக்கி வருகிறது.
உலகளாவிய மின்னணுப் போட்டியில் சிங்கப்பூர் தேக்கமடையாமல் முன்னே செல்லும் நோக்கத்தில் அத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
6ஜி சேவைகளை வரும் 2030க்குள் இங்கு பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவைகளைவிட அவை 100 மடங்கு வேகம் மிகுந்ததாகவும் தகவல்கடத்துதலில் தாமதம் குறைந்ததாகவும் இருக்கும்.
சீனாவில் உள்ள ஆய்வுக்கூங்களில் ஏற்கெனவே வினாடிக்கு 200 கிகாபைட் வேகமுள்ள இணையத்தொடர்பு உள்ளது.
மக்கள் தங்கள் சுற்றுப்புறத்துடன் தொடர்புகொண்டு அதைப் புலன்கள் மூலம் உணரும் வழிகளை 6ஜி தொழில்நுட்பம் மாற்றி அமைக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும், மின்னணு உலகுக்கும் புவியியல் உலகுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காண முடியாது போகலாம். உடனுக்கு உடன் உண்மை போலத் தோன்றும் முப்பரிமாணப் படிமங்களைக் காட்சிப்படுத்தும் ஆற்றலை 6ஜி தொழில்நுட்பம் பெற்றிருக்கும். தற்போதைய மெய்நிகர், மிகை மெய் தொழில்நுட்பங்களும் மேம்பட்டிருக்கும்.
தற்போது கணினித் தரவுகளுக்கென்று இடம் ஒதுக்கப்பட்டு அந்நிலையத்தில் தரவுகள் முறைப்படுத்தப் படுகின்றன. ஆனால் 6ஜி தொழில்நுட்பம் பரவலாகும்போது அந்த நிலையம் மிக அருகிலேயே இருக்கலாம்.
எவ்வாறு கைப்பேசியில் தகவல்கள் அடங்கியுள்ளனவோ அவ்வாறு தானியங்கி முறையில் செலுத்தப்படும் வாகனம் கடந்துசெல்லும் விளக்குக் கம்பத்திலோ மெய்நிகர் மூக்குக் கண்ணாடியிலோ தரவுகள் இருக்கும்.
குறிப்பாக தற்போது பரிசோதிக்கப்பட்டு வரும் தானியங்கி வாகனமோட்டுதலை அதிகத் துல்லியத்தையும் நம்பகத் தன்மையையும் 6ஜி தொழில்நுட்பம் கொண்டு வரக்கூடும்.