கருணாநிதி துர்கா
பல்வேறு தரப்பினரையும் ஈர்த்துள்ள சமூக ஊடகங்களால் நன்மைகளும் உண்டு என்றாலும்கூட ஒருவரின் மனநலம், தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பாதிக்கும் பிரச்சினைகளையும் இவை ஏற்படுத்தியுள்ளன.
மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் மனித இயல்புக்கு ஏற்ப, சமூக ஊடகத்தில் மற்றவர் பதிவுகளுக்குக் கிடைக்கும் வரவேற்பையும் தங்கள் பதிவுகளுக்குக் கிடைப்பதையும் ஒப்பிடுவோர் அதிகம்.
விருப்பக் குறியீடுகளைக் குவிப்பதும் அதிகமானோரைப் பின்தொடர்வோராகப் பெற்றிருப்பதும் தங்கள் மதிப்பைக் கூட்டுவதாக இளையர் பலரும் கருதுகின்றனர்.
சமூக ஊடகத்தில் சித்திரிக்கப்படும் அழகு சார்ந்த தகவல்களால் தன்னம்பிக்கையைத் தொலைத்தோரும் உண்டு. சமூக ஊடக அங்கீகாரம் குறித்துக் கருத்துரைத்தனர் சிங்கப்பூர் இளையர்கள் சிலர்.
டிக்டாக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களைப் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துவதாகக் கூறினார் தன்யஸ்ரீ, 17. பெரும்பாலும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் விதமான காணொளிகளையும் நகைச்சுவைகளையும் இவர் பதிவு செய்வதுண்டு.
"நான் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தொடங்கியபோது பின்தொடர்வோர் எண்ணிக்கையும் எனது பதிவுகளுக்கான விருப்பக் குறியீடுகளும் குறைவாக இருந்தன. அப்போது அதை எண்ணி மனம் வருந்தியதுண்டு. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் என்னை நானே எடைபோடக் கூடாது என்பதை உணர்ந்துள்ளேன்," என்றார் இவர்.
சமூக ஊடகங்களின் மூலம் ஊக்கம் கிடைத்தாலும் அவை தன்னம்பிக்கைக்கான அடித்தளம் அல்ல என்பது தன்யஸ்ரீயின் கருத்து.
பள்ளி வாழ்க்கையைப் பற்றி இன்ஸ்டகிராம் தளத்தில் பதிவிடும் செல்லதுரை நாகலட்சுமி, 20, தொடக்கத்தில் ஒவ்வொரு பதிவுக்கும் எத்தனை விருப்பக் குறியீடுகள் கிடைக்கின்றன என்பதை நுணுக்கமாகக் கவனித்ததுண்டு.
"விருப்பக் குறியீடுகளுக்கும் பின்னூட்டக் கருத்துகளுக்கும் நான் கொடுக்கும் அளவுக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை இப்போது உணர்ந்துள்ளேன்," என்று கூறும் இவர், தற்போது நண்பர்களுடன் உரையாட மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்.
இன்ஸ்டகிராம், டிக்டாக், டுவிட்டர், பின்ட்ரஸ்ட், பீரியல் என்று பலதரப்பட்ட சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துகிறார் ஆகில் முகமது பிலால், 17.
இசை, திரைப்படங்கள், தனது சொந்த வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள் சார்ந்த விழிப்புணர்வுத் தகவல்கள் போன்றவற்றை இவர் பதிவு செய்கிறார்.
"சமூக ஊடகப் பதிவுகளில் நம்மைத் தாழ்த்திப் பேசுவோரையும் சில நேரங்களில் எதிர்கொள்ள நேரிடும்," என்று இவர் குறிப்பிட்டார்.
பாராட்டு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும் இப்போதெல்லாம் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஆகில்.
மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவுகளையும் பதிவு செய்யும் தளமாக சமூக ஊடகங்களைக் காண்கிறார் பழனியப்பன் கஸ்தூரி, 19.
"பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது நாம் புகழ்பெற்றவர் எனக் கருதப்படுகிறோம். ஆனால், இவர்களில் பலர் நண்பர்கள் அல்ல என்பதே உண்மை," என்று இவர் கூறினார்.
இணையத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டாலும் தன்னம்பிக்கை அதனால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம் என்று கூறினார் கஸ்தூரி.