தமிழர் பேரவை தலைமையில் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து சென்ற மாதம் 26ஆம் தேதி உலகத் தாய்மொழி நாளைக் கொண்டாடின.
உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புக்கிட் தீமா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் பேரவையின் மதியுரைஞருமான திரு ஆர். ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கல்வி பயிலும்போதும் வேலையிடத்திலும் தமிழ்மொழி பேசுவதில் இளையர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
சக்தி நுண்கலை நடனப் பள்ளி மாணவியர், பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய சங்கே முழங்கு பாடலுக்கு நடனமாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். கவிமாலைத் தலைவர் இன்பா தாய்மொழி பற்றிய கவிதையை வாசித்தார்.
தமிழர் பேரவைத் தலைவர் வெ. பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். அதிபதி நாடகக் குழுவினர் தாய்மொழியைக் கருவாகக் கொண்ட குறுநாடகத்தைப் படைத்தனர். இளையர்களே வசனம் எழுதி, பேசி, நடித்த குறு நாடகம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
நிகழ்ச்சியில், தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்வதில் நாம் வெற்றி பெற்றுள்ளோமா? என்னும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இளையர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் நிச்சயமாக இளையர்கள் கலந்துகொள்வார்கள், இளையர்கள் அதிகம் புழங்கும் இன்ஸ்டாகிராம், டிக் டாக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தாய்மொழிக் கற்றலைத் தூண்டும் விதத்தில் பதிவுகள் இடம்பெறுவது இளையர்களை ஈர்க்க உதவும் என்று சில எடுத்துக்காட்டுகளுடன் இளையர்கள் கலந்துரையாடினர்.
தமிழாசிரியர்களுடன் பெற்றோர்களும் வீட்டில் தமிழில் பேச, பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும் போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவி முத்து சுவேதா, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவி அருணா கந்தசாமி, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி கமலக்கண்ணன் யாழினி, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மோகன் ஹரிவர்த்தினி, விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவி ஜீவந்திகா ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இளையர்களுடன் முனைவர் இரத்தின வேங்கடேசனும் முனைவர் மன்னை க. இராஜகோபாலனும் இதில் பங்கேற்றனர். சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் கலந்துரையாடலை வழிநடத்தினார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன் நிகழ்ச்சியை நடத்த ஒத்துழைப்பு நல்கிய அமைப்புகளுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மொத்தம் 16 அமைப்புகள் இந்த தாய்மொழி நாள் கொண்டாட்டத்தில் ஒருங்கிணைந்தன. ஏறக்குறைய 200 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

