பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ்
நாராயணன் இம்மாதம் 18ஆம் தேதியன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். இந்நிகழ்ச்சி மாலை 6 மணி அசியாட்டா அரீனாவில் நடைபெறுகிறது.
'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்துக்கு இசையமைத்திருந்த சந்தோஷ் நாராயணன், மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவது இதுவே முதல்முறை.
அதுமட்டுமல்ல, இதுவே சந்தோஷ் நாராயணனின் முதல் அனைத்துலக இசைநிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
'சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்' எனும் தலைப்பில் மேடை ஏற்றப்படும் இந்த இசைநிகழ்ச்சிக்கு மலேசியாவைச் சேர்ந்த ரீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இசைநிகழ்ச்சி தொடர்பாக கோலாலம்பூரில் உள்ள லெ மெரிடியன் ஹோட்டலில் அண்மையில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.
அதில் சந்தோஷ் நாராயணனுடன் அவரது மனைவி மீனாட்சி ஐயரும் கலந்துகொண்டார்.
பிரபல தமிழ்த் திரைப்படப் பாடல்களையும் இதற்கு முன் கேட்டிராத புதிய பாடல்களையும் ரசிகர்கள் முன் கொண்டு வந்து மகிழ்விக்க திறமைமிக்க பாடகர்கள் பட்டாளம் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மெருகூட்ட 'டீ' என்று அழைக்கப்படும் பிரபல பாடகி தீக்ஷிதா வெங்கடேசனும் இந்நிகழ்ச்சியில் பாட இருக்கிறார். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்.
இவர் பாடிய 'எஞ்சாய் எஞ்சாமி' பாடல் யூடியூப்பில் இதுவரை 433 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்த்தும் கேட்டும் ரசிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் துருவ் விக்ரம், ஹரிசரண், சூப்பர் சிங்கர் பிரியங்கா போன்ற நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனர்.
"இந்தியாவுக்கு வெளியே முதல்முறையாக இசைநிகழ்ச்சி ஒன்றை மேடையேற்ற இருக்கிறேன். அதற்காக நான் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். எனது ஆக அண்மைய படைப்புகளை ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி இசைக்கு உண்டு. எனது இசைநிகழ்ச்சியும் அவ்வாறு செய்யும் என நம்புகிறேன்," என்றார் 39 வயது சந்தோஷ் நாராயணன்.

