பாரம்பரிய கெபாயா ஆடையை யுனெஸ்கோவின்
கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்ப்பதற்கான நியமனத்தை சிங்கப்பூர், புருணை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய ஐந்து தென்கிழக்காசிய நாடுகளும் சேர்ந்து சமர்ப்பிக்கவுள்ளன.
தென்கிழக்காசிய நாடுகளின் பாரம்பரிய ஆடைகளில் ஒன்றான சாரோங் கெபாயாவை ஐக்கிய நாட்டு அமைப்பின் யுனெஸ்கோவின் மானுடத்தின் புலன் அறியாத கலாசார மரபுடைமைப் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இம்மாதம் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா அதற்கான பன்னாட்டுக் கூட்டங்களை முன்னெடுத்தது. சிங்கப்பூரின் தேசிய மரபுடைமை வாரியம் அது பற்றி மலேசியாவிலும் இந்ேதானீசியாவிலும் நடைபெற்று வந்துள்ள கூட்டங்கள், பயிலரங்குகள் போன்றவற்றில் அண்மைய மாதங்களாகக் கலந்துகொண்டுள்ளது. உள்நாட்டிலும் அது கெபாயா ஆர்வலர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அது கலந்துரையாடல்களை நடத்தி கருத்து கேட்டு வந்துள்ளது.
மேல்சட்டையும் கீழே பாத்திக் துணியிலான பாவாடையும் அடங்கிய பாரம்பரிய சாரோங் கெபாயா ஆடை தென்கிழக்காசியாவில் பல்வேறு வடிவங்கள், துணி வகைகள், வண்ணங்களில் தயாரிக்கப்படுகிறது.
யுனெஸ்கோ பட்டியலில் வெறும் ஆடையைச் சேர்ப்பது நோக்கமல்ல. மாறாக அதன் கலாசார மரபை, அதாவது அந்த ஆடையை அணியும் நடைமுறைகள், அதை வடிவமைத்துத் தயாரிக்கும் முறை போன்றவற்றைப் பாதுகாப்பது இலக்காகும்.
பல்வேறு சமூகங்களில் கெபாயா எவ்வாறு தலைமுறை தலைமுறையாகக் கொண்டு சேர்க்கப்பட்டு இடம், பொருளுக்கு ஏற்ப எவ்வாறு மாறுகிறது என்பதை எடுத்துரைப்பதும் நோக்கமாகும்.
காபா முதல் கெபாயா வரை
மேல் அங்கியைக் குறிக்கும் காபா என்ற அரபுச் சொல் மறுவி கெபாயா ஆகியிருக்கக் கூடும் என்று பெரனாக்கான் நிபுணரும் வரலாற்று ஆய்வாளருமான பீட்டர் லீ கூறினார்.
இந்தியப் பெருங்கடல் நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றில் கெபாயா 1400 முதலான காலகட்டத்திலிருந்து பரவி வந்ததாகவும் அச்சொல் மாலத் தீவுகளின் மால மொழி, சிங்களம், மலாய், ஜாவா மொழி போன்றவற்றில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 1800களில் அலங்கார ஆடையாக கெபாயா உருவெடுத்தது என்றும் 1960களில் அது பாரம்பரிய ஆடையாகப் பிரபலமானது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
அப்போதுதான் பூத்தையல் கொண்ட கட்டையான மேல் அங்கியாக கெபாயாவின் மேல் அங்கி மாறியது. பெரானாக்கான் சமூகத்தில் ஐரோப்பிய, ஜப்பானிய தையல் முறைகள் அதற்குப் பின்பற்றப்பட்டது.
சிங்கர் தையல் இயந்திர நிறுவனம் தயாரித்த பூத்தையல் ஜாவாவில் கெபாயா மேல் அங்கிக்குப் பயன்படுத்தப்பட்டது. 1950களுக்குப் பிறகு சிங்கப்பூரில் ஒவ்வொரு தனி நபருக்கும் ஏற்ற கெபாயா ஆடைகளைத் தைக்கும் கடைகள் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டன.
இன்று அத்தகைய சில தையல் கடைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. $150யில் தொடங்கி பல்லாயிரம் வெள்ளி வரைக்கும் அவை விற்கப்பட்டு வருகின்றன.