நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் இடம்பெற்றிருக்கும் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் இவ்வாண்டு சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது.
கட்டாயம் பார்க்க வேண்டிய தரமான ஆவணப் படம் என்று பல விமர்சகர்களால் வருணிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்துக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
41 நிமிடங்கள் நீடிக்கும் ஆவணப் படத்தில் பெரும்பகுதி தமிழ்மொழியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் முதுமலை யானைக் காப்பிடத்துக்குக் கொண்டுவரப்படும் யானைக் குட்டிகளைக் காத்து வளர்க்கும் பொம்மனும் பெல்லியும்தான் ஆவணப் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் ஆவர்.
விருதைப் பெற்றுக்கொள்ள மேடையேறிய 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வெஸ், "இயற்கை உலகுக்கும் மனிதர்களுக்கும் உள்ள புனித பந்தம், பழங்குடி இனமக்களை மதிப்பதன் அவசியம், நம்முடன் வெளிகளைப் பகிர்ந்துகொள்ளும் மற்ற உயிரினங்களுக்குக் காட்ட வேண்டிய கருணை ஆகியவற்றுடன் சேர்ந்து வாழ்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி பேச வந்திருக்கிறேன்," என்றார்.
தமிழ் தெரிந்த பெண் கார்த்திகி
தமிழ் தெரிந்த பெண் ஒருவர் முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்றிருக்கலாம்.
உதகையில் பிறந்து நீலகிரி மலைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வளர்ந்து கோயம்புத்தூரில் படித்த கார்த்திகி, இயக்கிய முதல் ஆவணப்படம் இதுவாகும்.
ஒளிப்பதிவாளராகவும் புகைப் படக் கலைஞராகவும் பணியாற்றியுள்ள அவர், ஆவணப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான யானைக் காப்பாளர்கள் பொம்மன், பெல்லி உள்ளிட்ட பழங்குடி இனமக்களுடன் ஐந்து ஆண்டுகள் வசித்து வந்தார்.
பார்வையாளர்களின் மனதைக் கொள்ளைகொண்ட ரகு யானைக்குட்டி பிறந்து மூன்று மாதங்களிலிருந்து அவர் அதனுடன் பழகி வந்தார். சுமார் 450 மணிநேரக் காணொளிகளை கார்த்திகி சேர்த்து வைத்திருந்தார். அதுவே ஆவணப்படம் ஆனது. தம்முடன் தங்கள் அறிவாற்றலைப் பகிர்ந்துகொண்ட பொம்மன், பெல்லி இருவருக்கும் கார்த்திகி விருது மேடையில் நன்றிகூறத் தவறவில்லை.
சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படம் அவ்விருதை வென்றிருப்பது இதுவே முதன்முறையாகும்.
சூரரைப் போற்றுவுடன் தொடர்பு
ஆவணப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனித் மோங்கா தமிழ்த் திரையுலகத்துக்குத் தெரியாதவர் அல்ல. தமிழ் நடிகர் சூர்யா நடித்து 2019ல் வெளியான சூரரைப் போற்று படத்தின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர்.
மேடையில் நெகிழ்ச்சியுடன் ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொண்ட குனித், 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கு அதை அர்ப்பணித்தார். இந்தியத் தயாரிப்பு ஒன்று முதன்முறையாக வென்றதை சுட்டிக்காட்டிய அவர், இரண்டு பெண்கள் அதை சாத்தியமாக்கினர் என்றார்.
இது குனித் பெற்றிருக்கும் இரண்டாவது ஆஸ்கர் விருதாகும். 2018ல் 'பீரியட். எண்ட் ஆஃப் செண்டன்ஸ்' எனும் ஆவணப்படத்துக்காக இதே பிரிவில் அவர் விருதைப் பெற்றார். ஆனால் அது அமெரிக்கத் தயாரிப்பாக ஆஸ்கரை வென்றது.
பெல்லி, பொம்மன், ரகு, அம்மு
விருதுபெற்ற செய்தியைக் கேட்ட பெல்லி, ஒரு காலத்தில் யாரும் அண்டாமல் தனித்து விடப்பட்ட தம்மை இன்று அனைவரும் அரவணைத்துக்கொண்டுள்ளதாகக் கூறி, மகிழ்ச்சி தெரிவித்தார்.
யானைக்காப்பாளர்களான பெல்லியும் பொம்மனும் எவ்வாறு தங்கள் இனத்திலிருந்து தனித்துவிடப்பட்ட ரகு, அம்மு என்ற இரண்டு யானைக் குட்டிகளைப் பாதுகாத்து வளர்த்து அவற்றை மனதளவில் தங்கள் சொந்தப் பிள்ளைகளாக்கிக் கொள்கிறார்கள் என்பதே ஆவணப்படத்தின் கதையாகும்.
இருவரும் மலைக்காடுகளில் பலநூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் காட்டுநாயக்கர் எனும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். எளியவர்கள் என்றாலும் பேரன்பு காட்டும் பெருமக்கள்.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இருக்கும் தொடர்பையும் ஒன்றால் மற்றொன்றை வாழவும் சாகவும் வைக்க முடியும் என்பதையும் ஆவணப்படம் எடுத்துரைக்கிறது. அத்துடன், முது மலையின் எழிலை அது பார்வை யாளர்களுக்குக் கடத்துகிறது.
பச்சைப் பசேலென இருக்கும் மலைப்பகுதியில், யானையும் மனிதரும் விளையாடி, இரு உயிரினங்கள் நிபந்தனையற்ற அன்பைப் பரிமாறிக்கொள்ளும் காட்சிகள் மனதிலும் கண்களிலும் ஈரம் கசியவைக்கக்கூடியவை.
இயற்கையும் அன்புமே இந்த உலகத்தை இயங்கவைத்துக்கொண்டிருக்கின்றன என்ற புரிதலை ஏற்படுத்தும் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' தவிர்க்க முடியாத தமிழ்ப் படமாகும்.

