சிறந்த அசல் பாடலுக்கான விருதை ஆஸ்கர் நிகழ்ச்சியில் 'நாட்டு நாட்டு' தெலுங்குப் பாடல் வெல்வதற்கு முன்னதாக அதன் மேடை அரங்கேற்றத்தை அறிமுகம் செய்ய வந்தார் இந்திய நடிகை தீபிகா படுகோன். நாட்டு நாட்டு என்ற பாடல் தலைப்பை அவர் உச்சரித்த ஒவ்வொரு முறையும் பலத்த கைதட்டலும் பேரொலியும் அரங்கில் ஒலித்தது.
கைதட்டலும் உற்சாகம் நிறைந்த விசில்களும் ஓய ஒவ்வொரு முறையும் பேச்சை சற்று நிறுத்தி, பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் நிறைந்த சிரிப்பை அள்ளிவீசினார் தீபிகா.
'நாட்டு நாட்டு' பாடலுக்குக் குரல் கொடுத்த காலபைரவா, ராகுல் சிப்பிலிகுன்ஜ் இருவரும் பாட, 20க்கும் அதிகமான நடனமணிகள் ஆட, மேடையில் உற்சாகத் தீ பற்றிக்கொண்டது.
இசையமைப்பாளர் கீரவாணி, ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் எஸ் எஸ் ராஜமெளலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் அமர்ந்து நடனத்தை ரசித்தனர்.
பாடல் முடிந்த மறுநொடியே அரங்கில் இருந்த வர்கள் எழுந்து கைதட்டிக் கூச்சல்இட்டுப் பாராட்டியபோதே அதற்கான விருது உறுதியாகிவிட்டது.

