புற்றுநோயால் மூக்கை இழந்த வருக்கு முப்பரிமாண முறையில் அச்சடிக்கப்பட்ட செயற்கை மூக்கை டான் டோக் செங் மருத்துவமனை பொருத்தியுள்ளது.
சிங்கப்பூரில் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட முதல் செயற்கை மூக்கு அதுவே என்று மருத்துவமனை கருதுகிறது.அசல் உடல் உறுப்புகள் போலவே இருப்பதுடன் நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ற செயற்கை உறுப்புகளை வழங்க இந்த முன்னோடித் திட்டம் வழிவகுக்கும் என்று மருத்துவமனை நம்புகிறது.
செயற்கை கைவிரல் உள்ளிட்ட மற்ற செயற்கை உடலுறுப்பு களை அச்சிட்டுப் பொருத்த அது திட்டமிட்டுள்ளது.
தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திரு ஜே எஃப் லியனின் மூக்கு சென்ற ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இதுபோன்ற மற்ற சம்பவங்களில் கையில் உள்ள திசுக்களை எடுத்து அறுவை சிகிச்சை மூலம் மூக்கை வடிவமைக்க வழியுண்டு. ஆனால் திரு லியன் தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால், மூக்குப் பகுதியில் மீண்டும் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் பயந்தனர்.
இவ்வேளையில் டான் டோக் செங் மருத்துவமனையின் மருத்துவ முப்பரிமாண அச்சு நிலையம் சென்ற நவம்பரில் திரு லியனுக்கென்றே வடிவமைக்கப்பட்டு பிசினால் ஆன மூக்கை அச்சிட்டுத் தர முன்வந்தது.
2020இல் செயல்படத் தொடங்கிய அந்நிலையம் 2022இல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. எட்டு அச்சு இயந்திரங்கள் உள்ள நிலையத்தில் மேடய்ரம் எனும் முப்பரிமண அச்சு நிறுவனத்தின் பொறியியலாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சையிலும் நோய் பற்றி மருத்துவர்கள் விளக்கவும் உதவுவது, பயிற்சி போன்ற தேவைகளுக்காக நிலையத்தில் உடல் உறுப்பு மாதிரிகள் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்டு வருகின்றன.
திரு லியனுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சிடி சோதனைகள் மூலம் உருவாக்கப்பட்ட முப்பரிமாணப் படத்தைக் கொண்டு மூக்கு அச்சிடப்பட்டது.
அதைப் பொருத்துவதற்காக திரு லியன் வந்தபோது அவர் உடல் எடை குறைந்துவிட்டார் என்றும் மூக்கு அவருக்குப் பொருந்தவில்லை என்றும் தெரியவந்தது. திரு லியனின் முகம் மீண்டும் கையடக்க ஊடுகதிர் கருவியால் அளவெடுக்கப்பட்டு மூக்கு அச்சிடப்பட்டது.
அடுத்து மூக்கு பார்ப்பதற்கு இயற்கையானது போல தெரியவில்லையே என்ற ஆதங்கம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டது.
தொழில்நுட்பக் கல்விக் கழகம் கிழக்கின் அழகு, நலத்துறையின் தலைவர் ஜெசி கோவை அவர்கள் அணுகினர்.
அரங்க ஒப்பனையில் கை தேர்ந்த திருவாட்டி கோ இதுபோன்ற புதிய முயற்சியில் ஈடு படத் தயங்கினார். பிறகு, அந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட அவர், தமது சக ஊழியருடன் சேர்ந்து திரு லியனை பலமுறை சந்தித்து, பிசினாலான சாயத்தைத் தேர்வு செய்தார். செயற்கை மூக்குக்கு நுணுக்கமாக சாயம் பூசப்பட்டது. சென்ற 7ஆம் தேதி திரு லியனுக்கு செயற்கை மூக்கு பொருத்தப்பட்டது.

