தமிழ் புதினம் ஒன்றின் மொழிபெயர்ப்பு உலகளவில் முக்கியத்துவம் பெற்ற அனைத்துலக புக்கர் பரிசின் நீள் பட்டியலுக்கு முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'பையர்' (வேள்வி) பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டது. 2016இல் வெளியிடப்பட்ட அந்த மொழிபெயர்ப்பை அனிருத்தன் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார்.
இவ்வாண்டு அனைத்துலக புக்கர் பரிசின் நீள்பட்டியலுக்கு பையர் உள்ளிட்ட 13 நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஜெரமி டியாங் மொழிபெயர்த்த 'நைன்த் பில்டிங்' எனும் நூலும் அவற்றில் ஒன்று. சீனாவைச் சேர்ந்த சாவ் ஜிங்சி அதன் மூலத்தை எழுதியுள்ளார்.
எந்தவொரு மொழியிலும் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் நூல் அனைத்துலக புக்கர் பரிசைப் பெற தகுதி பெறும். பரிசுத் தொகையான 50,000 பவுண்டை (S$89,100) எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் பாதிப் பாதியாக பகிர்ந்துகொள்வர்.
கீதாஞ்சலி ஸ்ரீ எனும் இந்திமொழி எழுத்தாளர் எழுதிய நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு சென்ற ஆண்டு அனைத்துலக புக்கர் பரிசைப் பெற்றது. 'டூம்ப் ஆஃப் சேண்ட்' என்ற தலைப்பில் டெய்சி ராக்வெல் என்பவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

