கழிவறை இருக்கையைவிட, பலமுறை பயன்படுத்தக் கூடிய (reusable) தண்ணீர் போத்தலில் 40,000 மடங்கு அதிக நுண்கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கலாம் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 'வாட்டர்ஃபில்டர்குரு.காம்' நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, தண்ணீர் போத்தல்களின் பல பகுதிகளை ஆய்வுசெய்தனர்.
அந்த போத்தல்களில் இருவகை நுண்கிருமிகள் ஒட்டிக்கொண்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்ததாக 'ஹஃப்போஸ்ட்' செய்தி தெரிவித்தது.
இந்த இரண்டில் ஒருவகை நுண்கிருமி, 'ஆன்டிபயாட்டிக்' எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகளையும் வலுவாக எதிர்க்கக்கூடிய தொற்றை ஏற் படுத்தலாம் என்றும் இன்னொரு நுண்ணுயிரி இரைப்பை, குடல் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன், தண்ணீர் போத்தல்களின் சுத்தத்தை வீட்டில் பயன்படுத்தப்படும் மற்ற பொருள்களுடன் ஆய்வாளர்கள் ஒப்பிட்டனர். அதில், சமையலறைக் கழுவுதொட்டியில் இருப்பதைப்போல் இருமடங்கும் கணினிச் சுட்டியில் (mouse) இருப்பதைப்போல் நான்கு மடங்கும் நுண்கிருமிகள் தண்ணீர் போத்தலில் ஒட்டிக்கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர்.
"மனிதர்களின் வாய், பல தரப்பட்ட, பெரும் எண்ணிக்கையிலான நுண்கிருமிகளின் இருப்பிடமாக உள்ளது. அதனால், அருந்துகலன்களில் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதில் வியப்பில்லை," என்றார் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் மூலக்கூறு நுண்ணுயிரியல் வல்லுநர் டாக்டர் ஆண்ட்ரூ எட்வர்ட்ஸ்.
எனினும் தண்ணீர் போத்தல் களாலும் நீர்க்குழாய்களாலும் ஆபத்தில்லை என்றார் ரெடிங் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் வல்லுநர் சைமன் கிளார்க்.
"தண்ணீர் போத்தல் காரணமாக ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. அதுபோல, தண்ணீர்க் குழாய்களும் ஒரு பிரச்சினை இல்லை. மனிதர் களின் வாயில் இருக்கும் நுண்கிருமிகளே தண்ணீர் போத்தல் களிலும் பெரும்பாலும் ஒட்டிக்கொண்டிருக்கலாம்," என்றார் டாக்டர் சைமன்.

