சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்த பவன் உணவகத்தின் ஆதரவுடன் வழங்கிவரும் ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசுக்கான தொகை இவ்வாண்டு முதல் $3,000ஆக அதிகரிக்கப்படும்.
இம்மாதம் 5ஆம் தேதி, தேசிய நூலகத்தின் இமேஜினேஷன் அறையில் மாலை 4 மணிக்கு நடைபெற்ற 107ஆவது கதைக்களம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன் அதைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு முதல் மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசுத் தொகை 1,000 வெள்ளி உயர்த்தப்பட்டு 3,000 வெள்ளியாக வழங்கப்படும் என்றார் அவர்.
இந்த ஆண்டு புத்தகப் பரிசு, கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்படவுள்ளது. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியீடு செய்யப்பட்ட கவிதைத் தொகுப்புகளை வரும் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி அவர் சொன்னார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் கழகத்தின் காலஞ்சென்ற முன்னாள் தலைவர் சுப.அருணாசலத்தின் இரண்டாமாண்டு நினைவஞ்சலி இடம்பெற்றது.
உள்ளூர் படைப்பாளர் மாதங்கி கலந்துகொண்டார். வரலாற்றுப் புனைவிலக்கியத்திற்கு தரவிறக்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மைகளையும் சரிபார்ப்பதின் முக்கியவத்துத்தை வலியுறுத்தினார். அவரது படைப்புகள், பங்களிப்பு பற்றியும் பேசப்பட்டது.
தமிழ் மொழி விழா ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருப்பதால், அடுத்த கதைக்களம் மே மாதம் நடைபெறும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
'உள்ளூர் எழுத்தாளர் அறிமுகம்' அங்கம் மாற்றப்பட்டு 'உள்ளூர் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு அல்லது நாவல் களின் ஆய்வும் கலந்துரையாடலும்' எனும் புதிய அங்கம் அறிமுகப்படுத்தப்படும்.
செய்தி, படம்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்

