காலையில் எழுந்ததும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டால் எடை குறைந்து உடலுறுதி மேம்படும் என்ற எண்ணத்தில் கணிசமானவர்கள் வெறும் வயிற்றுடன் ஓடச் செல்வதுண்டு. ஆனால் அது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்.
வெறும் வயிற்றில் ஓடுவது போன்ற இதயத்துக்கு அதிக வேலை தரும் உடற்பயிற்சியைச் செய்தால், தான் தேக்கி வைத்துள்ள கொழுப்பையும் மாவுச்சத்தையும் உடல் கரைக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறின.
ஆனால் உண்டுவிட்டு பலுவுள்ள உடற்பயிற்சி செய்தாலும் வெறும் வயிற்றில் செய்தாலும் உடலில் கொழுப்புச் சத்து ஏறத்தாழ அதே அளவுக்குக் குறை வதாக அனைத்துலக விளையாட்டுச் சங்கம் நடத்திய ஆய்வு கூறியுள்ளது.
மேலும், வெறும் வயிற்றில் பலுவுள்ள உடற்பயிற்சி செய்தால், உடலில் வலு குறையலாம். தலைசுற்றல், மயக்கம், நடுக்கம் போன்றவை ஏற்படலாம்.
கொழுப்புக் கரைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், ஓட்டப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளும்போது கொழுப்பைச் சேர்க்காமல் புரதம், மாவுச் சத்து அதிகமுள்ள உணவுவகைகளை உட்கொள்ளும்படி நிபுணர்கள் கூறினர்.
முட்டை, தயிர், கருணைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தயிர், பழங்கள், வேர்க் கடலை வெண்ணெய்யுடன் ஒரு துண்டு ரொட்டி போன்றவற்றை உண்டுவிட்டு உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் அதிகம் சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்யவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

