பெற்றோரிடமிருந்து போதுமான அன்பு கிடைப்பது ஒரு பிள்ளையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. எனினும், நவீன வாழ்க்கையில் பல்வேறு காரணங்களால் பெற்றோரால் பிள்ளைகளுக்குப் போதுமான அன்பையும் அரவணைப்பையும் வழங்க முடியாமல் போகலாம்.
அவ்வாறு நிகழும்போது அது பெற்றோருக்குத் தெரியாமல் இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. பிள்ளைகளுக்குப் பெற்றோரிடமிருந்து கூடுதல் அன்பு தேவைப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டும் சில அறிகுறிகள் இருக்கின்றன.
பிள்ளைகள் அதிகம் சொல்லும் குறைகள்: தந்தை அல்லது தாய் வேலை முடிந்து தாமதமாக வீடு திரும்புகின்றனர்; பள்ளி நிகழ்ச்சியில் தான் பங்கேற்பதைப் பெற்றோர் நேரில் வந்து பார்க்கவில்லை.
இதுபோன்ற குறைகளைப் பிள்ளைகள் அடிக்கடி முன்வைத்தால் பெற்றோர் அவற்றைக் கருத்தில்கொண்டு பிள்ளைகளுக்கு உகந்த வகையில் செயல்படவேண்டும்.
அதிகம் கோபப்படுவது: பிள்ளைகள் கடும் கோபத்துடன் நடந்துகொள்வது என்பது பல வேளைகளில் இயல்பான ஒன்றாகப் பலர் நினைக்கலாம். ஆனால், இதை அவ்வளவு எளிதாக நினைப்பது ஆபத்தானதாகவும் இருக்கலாம்.
சில வேளைகளில் பிள்ளைகள் அதிக கோபத்தைக் காண்பித்தால் அவர்கள் பெற்றோரின் அன்புக்காக ஏங்குகின்றனர் என்று அர்த்தம். பிள்ளைகள்மீது தங்களுக்கு இருக்கும் பாசத்தைப் பெற்றோர் அடிக்கடி எடுத்துச்சொல்வது முக்கியம்.
தவறான பேச்சு: பிள்ளைகள் பேசக்கூடாதவற்றைப் பேசினால் அச்செயல் அவர்கள் அனுபவிக்கும் வேதனைக்கு எதிரான போராட்டமாக இருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர் கண்டிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அரவணைப்பையும் வெளிப்படுத்தவேண்டும்.
பேசாமல் இருப்பது: பெரும் துயரத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் இயல்புக்கு மாறாக அதிகம் பேசாது அமைதியாக இருக்கலாம்.
இவ்வேளையில் பெற்றோர் அவர்களை வெளியே அழைத்துச் சென்று பொதுவான விவகாரங்களைப் பற்றிப் பேச வைக்கலாம்.
விசித்திரமாக நடந்துகொள்வது: பாதிக்கப்பட்ட பிள்ளைகள் தங்களின் அறையைத் தூய்மையின்றி வைத்திருக்கலாம்; நண்பர்களை அறவே சந்திக்காமல் இருக்கலாம். பிள்ளைகள் இப்படி விசித்திரமாக நடந்துகொள்ளும் நேரத்தில் பெற்றோர் அவர்களுடன் தனியாக நேரம் செலவிடலாம். பிள்ளைகளுக்கென சுவையான உணவைச் சமைத்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம்.
பெற்றோரை இழிவுபடுத்துவது: பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பிறருக்கு முன்னால் பெற்றோரை அவமானப்படுத்தக்கூடும். அவர்களை உடனடியாகக் கண்டிக்கவேண்டாம். அதற்குப் பதிலாகப் பிள்ளைகளுடன் தனியாகப் பேசி அவர்களை நன்கு புரிந்துகொள்ள முயற்சி செய்வது நல்லது.
அறையிலேயே இருப்பது: சில பிள்ளைகள் யாருடனும் கலந்துறவாடாமல் அறையிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வர். இத்தகைய பிள்ளைகளுக்கு அவசர உதவி தேவை. அறைக்குச் சென்று பெற்றோர் அவர்களுடன் பொறுமையாக நேரம் செலவிடலாம். அவர்களுக்குப் பிடித்த சிற்றுண்டிகளை வழங்கலாம். இத்தகைய முயற்சிகளை எடுத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளை படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.
இவை, பிள்ளைகள் அன்பிற்கு ஏங்குவதை எடுத்துக்காட்டும் சில அறிகுறிகள் மட்டுமே என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகம் குறிப்பிட்டுள்ளது.