அனுஷா செல்வமணி
தற்போது மழைக்காலமாக இருப்பதால் நம்மில் பலருக்கு நோய் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது. குறிப்பாக சளிக்காய்ச்சல், இன்ஃபுளுயென்ஸா கிருமி நம்மை புரட்டிப்போடக்கூடும்.
இத்தகைய சூழலில் நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து லிட்டில் இந்தியாவில் ஷிஃபா மருந்தகத்தை நடத்தும் டாக்டர் முஹம்மது கஸாலி ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளபோதிலும் அடுத்த சில நாள்களில் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுவதாக அவர் கூறினார். முன்னுரைக்க முடியா வானிலையும் பலர் முகக்கவசம் அணியாமல் இருப்பதும் இதற்கான முக்கிய காரணங்கள் என டாக்டர் கஸாலி தெரிவித்தார். உருமாறும் புதிய சளிக்காய்ச்சல் வகைகள் தலைதூக்குவதாகவும் சுவாச திரவத் துளிகளால் கிருமிகள் பரவுவதாகவும் அவர் கூறினார்.
இதை முறியடிக்க சளிக்காய்ச்சல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது என அவர் வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்தால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்றார் அவர்.
சளிக்காய்ச்சல் வரும்வரை காத்திருக்காமல் தடுப்பூசியை முன்கூட்டியே போட்டுக்கொள்ள வேண்டுமென்ற டாக்டர் கஸாலி, தடுப்பூசி போட்ட பிறகு அது நம் உடலில் செயல்பட இரண்டு வாரங்கள் ஆகும் என்று கூறினார்.
நம் சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக உள்ளதால் மிகக் கடுமையான சளிக்காய்ச்சல் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. சராசரியாக ஒரு நாளில் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் எட்டு நோயாளிகளை டாக்டர் கஸாலி பரிசோதித்து சிகிச்சை அளிக்கிறார். சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டு சிகிச்சை அளித்த பிறகும் பாதிப்பு தொடர்ந்தால் அது நிமோனியா காய்ச்சலாக இருக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மழைக்காலமாக இருக்கும் இந்நேரத்தில், வெளிப்புறங்களில் நீண்டநேரம் இருக்காதீர்கள் என்றும் வெளியே செல்லும்போது முடிந்தவரை முகக்கவசத்தை அணிந்திருப்பது நல்லது என்றும் சாதாரண சளிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது என்றும் டாக்டர் கஸாலி கூறினார்.

