மேற்கத்திய செவ்விசை மேதை பீத்தோவன் மறைந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தலைமுடியைக் கொண்டு அவரது மரபணு வரிசையை அறிவியலாளர்கள் வரிசைப்படுத்தியுள்ளனர்.
பீத்தோவன் உயிரிழக்க முக்கியக் காரணமாக இருந்த அவரது கல்லீரல் நோய் பற்றி அவர்கள் கூடுதல் தகவல்களைப் பெற்றுள்ளனர். ஆனால் அந்த இசைமேதைக்கு ஏன் காது கேளாது போனது என்பது ஆய்வாளர்களுக்கு இன்னமும் புலப்படவில்லை.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதை வழிநடத்தினர். மரபணுக்களின்படி அவருக்குக் கல்லீரல் நோய் வரக்கூடிய சாத்தியம் இருந்ததாகவும் பீத்தோவனின் குடிப்பழக்கம் நோய்க்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர். மேலும் பீத்தோவன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு பி வகை கல்லீரல் அழற்சி நோய் ஏற்பட்டதாகவும் மரபணு வரிசை தெரிவித்தது.
தனியார், அரசாங்கங்கள் ஆகியவை வைத்திருந்த பீத்தோவனின் எட்டுதலைமுடிகளை ஆய்வாளர்கள் சோதித்தனர். அவற்றில் ஐந்து உண்மையாக பீத்தோவனின் தலைமுடிதான் என்று தீர்மானித்து அவற்றை ஆய்வு செய்தனர்.
மரபணுக்களின் தரம் சேதப் படுத்தப்பட்டிருந்ததாகவும் மிகவும் சிரமப்பட்டுதான் மரபணு மாதிரிகளைப் பெற முடிந்தது என்றும் ஆய்வாளர்களில் ஒருவரான ஜோஹானஸ் குராஸ் கூறினார்.
ஜெர்மனியின் போன் நகரில் 1770இல் பிறந்த லுட்விக் வான் பீத்தோவன், 1827இல் வியன்னாவில் காலமானார். 29 வயதுக்கு மேல் படிப்படியாகக் செவிப்புலனை இழந்த பீத்தோவனுக்கு 1818இல் முழுமையாகக் காது கேளாமல் போனது. அதற்கு மர பணுவரிசையின் மூலம் விளக்கம் கிடைக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறினர்.

