சிங்கப்பூரின் முதல் சில குடியிருப்பு வட்டாரங்களில் ஒன்றான தோ பாயோ இந்நாட்டின் அரசாங்க வீடமைப்புப் பேட்டைகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளும் மைல்கல்களும் கண்ட தோபாயோவின் மரபுடைமையைப் பறைசாற்றும் பாதைக்குப் புதுப்பொலிவு தரப்பட்டுள்ளது.
அக்கம்பக்கப் பூங்கா, அடுக்கு மாடிக் கட்டடங்கள், முதல் என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடி, விளையாட்டு மைதானம் என சிங்கப்பூரின் வீடமைப்புப் பேட்டைகளில் இன்று வழக்கமாக இடம்பெற்றுள்ள அம்சங்கள் பலவற்றுக்கும் பரிசோதனைக் கூடமாக விளங்கியது தோ பாயோ வட்டாரம். இச்சிறப்புமிக்க வட்டாரத்தின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் மரபுடைமைப் பாதையை தேசிய மரபுடைமைக் கழகம் புதுப்பித்திருக்கிறது.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் 11வது மரபுடைமைப் பாதையான அதில் நன்கறிந்த தோ பாயோ வட்டாரத்தைப் பற்றி பலரும் அறிந்திராதத் தகவல்களை எடுத்துரைப்பது நோக்கம்.
புதுப்பிக்கப்பட்ட பாதையில் தற்போது 29 மரபுடைமைக் கட்டடங்களும் 10 மரபுடைமைப் பாதைச் சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. எலிசபெத் அரசியார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை புரிந்த புளோக் 53 மரபுடைமை இடங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
1970கள், 1980கள் ஆகியவற்றின் சிங்கப்பூரின் விளையாட்டு மைதானங்கள் இதுபோன்றுதான் இருந்தன என்பதை நினைவூட்டி வரும் டிராகன் வடிவம் கொண்ட விளையாட்டு மைதானமும் பாதையில் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூரின் ஆகப் பழைமையான பெளத்த மடாலயமான லியன் ஷான் ஷுவாங் லின் மடாலயம், முஹாஜிரின் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்கள் ஏற்கெனவே மரபுடைமைப் பாதையில் இடம்பெற்றுள்ளன.
கட்டடங்கள் மட்டுமல்ல மக்களின் கதைகளும் வரலாறே என்பதற்குச் சான்றாக, வீட்டில் இருந்த சிங்கப்பூர் பெண்கள் வெளியில் காலடி எடுத்துவைத்து தோ பாயோவில் அரும்பிய தொழிற்சாலைகளில் ஊழியர்களாக மாறி ஊழியரணிக்கு வலுசேர்த்த வரலாறு பற்றியும் புதுப்பிக்கப்பட்ட மரபுடைமைப் பாதை எடுத்துரைக்கும்.
புதுப்பிக்கப்பட்ட மரபுடைமைப் பாதையில் மூன்று கருப்பொருள்கள் கொண்ட வழிகளில் செல்லலாம். அரசாங்க வீடுகளும் பகிர்ந்துகொண்ட வெளிகளும், சமயங்களும் நம்பிக்கைகளும், சமூக நிலையங்களும் பொது இடங்களும் ஆகியவை அந்த மூன்று வழிகளாகும்.
இந்த வழிப்பாதைகளில் உள்ள இடங்களுக்குப் பொதுமக்கள் அரை மணி நேரத்திலிருந்து 2 மணி நேரத்துக்குள் தாங்களாகவே சென்று முடிக்கலாம். தேசிய மரபுடைமைக் கழகத்தின் Roots.gov.sg இணையத்தளத்தில் மரபுடைமைப் பாதைக்கான வழிகாட்டிகளைத் தரவிறக்கலாம்.

