ஓர் இடத்துக்குப் புதிதாகச் செல்லும்போது அங்கிருப்பவர்களிடம் நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்வதைப் பொதுவாக பலரும் தவிர்த்துவிடுவர். காரணம், வேலையிடமாக இருந்தால் எல்லாம் தெரிந்தவராக நடந்துகொள்பவருக்குத்தான் கூடுதல் பணிகள் வந்து சேரும். சுற்றியுள்ளவர்களும் நண்பராகவோ உறவாகவோ நெருங்கமாட்டார்கள்.
இருப்பினும், புதிதாக மண வாழ்க்கையில் இணைவோர், இந்த அறிவுரையை மனதில் நிறுத்திக்கொண்டால் பிரச்சினைகள் உருவாவதைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு, புதிதாக திருமணமான ஒரு தம்பதியரில் அந்தக் கணவன் மட்டுமே ஒரு விவகாரம் குறித்து முடிவெடுத்துவிடக்கூடாது. அதற்குப் பதிலாக, மனைவியின் கருத்தையும் கேட்டறிந்து முடிவைக் கூறவேண்டும்.
மனைவியின் கருத்தையோ முடிவையோ அறியும்வரை அந்தக் கணவன் தன்னை 'எல்லாம் தெரிந்தவனாக' காட்டிக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.
இதை எல்லா புதுமணத் தம்பதியரும் பழக்கமாக்கிக்கொண்டால் மண வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் சரிசமம் என்ற உணர்வே மேலோங்கும். அத்துடன் மோதலையும் தவிர்க்க முடியும்.
கணவன், மனைவி கூட்டாக ஒரு திட்டத்தை வகுக்கும்போது அவர்களுக்கிடையே உறவும் மேம்படும் என்கின்றனர் திருமண ஆலோசகர்கள்.
ஒருசில வேளைகளில் கணவன் அல்லது மனைவி மற்றொருவருக்காக விட்டுக்கொடுக்கும் பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள இந்த அறிவுரை உதவும்.
எடுத்துக்காட்டாக, குழந்தை பெற்றுக்கொள்ள ஓராண்டு காத்திருக்கலாம் என்பதில் மனைவி உறுதியாக இருந்து, காரணமறிய விரும்பாமல் கணவன் ஒத்துழைக்காவிட்டால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படலாம்.
ஆனால், அந்நேரத்தில் மனைவியின் விருப்பத்திற்குக் கணவன் விட்டுக்கொடுத்து தன்னை 'எல்லாம் தெரிந்தவனாக' காட்டிக்கொள்ளாமல் புரிந்து நடந்துகொண்டால் இருவருக்கும் இடையிலான உறவு வலுப்பெறும்.
"வெற்றிகரமான திருமணங்கள் ஒவ்வொன்றிலும் சற்று செவிடாக இருப்பது உதவியிருக்கும்," என்ற நியூயார்க் டைம்சில் இடம்பெற்ற ஒருவரது கூற்று இங்கு மிகப் பொருத்தம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் வழக்கத்தைப் பின்பற்றி வந்தால் நாளடைவில் பிள்ளைகளிடத்திலும் அதே அறிவுரையைப் பின்பற்றலாம்.
பிள்ளைகளைக் கண்டிக்கும்போது பெற்றோர் தங்களை 'எல்லாம் தெரிந்தவராகவும்' பிள்ளைகள் 'உலகநடப்பு அறியாதவராகவும்' இருப்பதாகக் கூறுவதைத் தவிர்க்கவேண்டும். இதுபோன்ற தருணங்களில் வாக்குவாதம் சூடுபிடித்து மனம் புண்படும் அளவுக்குப் போய்விடலாம்.
வீட்டுக்குத் தாமதமாக வரும் பிள்ளையிடம், "உன் வயதைத் தாண்டித்தான் நான் வந்தேன். எனக்குக் காது குத்தாதே. ஏன் இவ்வளவு தாமதம்?" என்று பெற்றோர் வினவினால் தன்னைப் பெற்றோர் புரிந்துகொள்ள தவறிவிட்டதாகத்தான் அந்தப் பிள்ளைக்குத் தோன்றும்.
அதற்குப் பதிலாக, 'எல்லாம் தெரிந்தவராக' பெற்றோர் தங்களைக் காட்டிக்கொள்ளாமல் காரணங்கேட்டு கண்டிப்பில் கொஞ்சம் அன்பு கலந்தால், உறவு பாதிப்படையாது.
இனி, திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவுள்ள நம் சொந்தங்களுக்கு 'எல்லாம் தெரிந்தவராக உன்னைக் காட்டிக்கொள்ளாதே' என்ற அறிவுரையையும் நாம் சேர்த்துக் கூறலாம்.

