வினோத் குமார்
மழை பெய்தால் அந்தத் தருணத்திற்கு ஒரு பாடல், சக ஊழியருக்குக் காதல் தோல்வி என்றால் அதற்கேற்ற ஒரு பாடல் எனத் தாம் வாகனம் கழுவும் வேலையிடத்தை உயிரோட்டமாக வைத்திருக்கிறார் சிங்கப்பூர் பெட்ரோலியம் நிறுவன ஊழியர் திரு விக்னேஷ் மகாலிங்கம்.
புத்துணர்ச்சியுடன் வேலையைச் செய்யும் அதேவேளையில் சக ஊழியர்களை உற்சாகமும் படுத்தவேண்டும் என்பதற்காக தமிழ் பாடல்களைப் பாடியவாறு வேலை பார்க்கிறார் இவர்.
ஒரு நாளில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் வரை வேலை செய்யும் 25 வயது விக்னேஷ், உடல் சோர்வைக் குறைக்கவும் வேலையிடத்தில் சுறுசுறுப்பாக இயங்கவும் தமக்குப் பிடித்த தமிழ் பாடல்களைப் பாடுவதையும் ஒரு பணியாகக் கருதி செய்வதாக தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
வாகனம் கழுவும் நிலையத்தில் மேற்பார்வையாளராக உள்ள அவர், காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை வேலை செய்வதாகவும் பின்னர் நான்கு மணி நேரம் கூடுதல் வேலை செய்து வருமானம் ஈட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
"ஒரு சில நாள்கள் அதிகமான கார்கள் வரும். அதனால் வேலைப் பளுவும் அதிகரித்துவிடும். அப்போது சில நேரம் தமிழ் தெரிந்த சக ஊழியர்களுடன் கூட்டாகப் பாடிக்கொண்டே வேலை செய்வது அனைவருக்கும் கூடுதல் உற்சாகம் தரும்," என்றார் விக்னேஷ்.
தமிழ்நாட்டின் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகவும் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 40 கார்களைக் கழுவுவதாகவும் கூறினார்.
தமக்கு இசைஞானம் இல்லாவிட்டாலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் விக்னேஷிற்கு மிக விருப்பமானவையாம்.
"ஒரு சமயம் மதிய வேளையில் பாடிக்கொண்டே நான் வேலை செய்வதைப் பார்த்த வாடிக்கையாளர் ஒருவர், உணவிற்காக 50 வெள்ளியை அன்பளிப்பாகக் கொடுத்தது மறக்க முடியாத ஒரு தருணம்," என்றார் விக்னேஷ்.
வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைத் தரும் அதேநேரம் தம் வேலையில் தொடர்ந்து மேம்படுவதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக விக்னேஷ் கூறினார்.
புதிதாக வரும் தொழில்நுட்பங்களைப் பயமின்றிப் பயன்படுத்தி வேலையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற ஆசை தமக்கு இருப்பதாகவும் இவர் கூறினார்.

