ஆ. விஷ்ணு வர்தினி
நேற்று அனைத்துலக திருநர் தினம். திருநங்கையர், திருநம்பியர் ஆகியோர் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் சமூகத்திற்கு இவர்களின் பங்களிப்பைக் கொண்டாடுவதற்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது.
இருப்பினும் இவர்களின் நம்பிக்கைகள் சமூகத்தின் கண்ணோட்டத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலை இன்னும் முற்றிலும் ஒழிந்தபாடில்லை.
அதனைச் சீர்படுத்த, உலகெங்கும் பல்வேறு சமூக ஆதரவுத் திட்டங்களும் அமைப்புகளும் தற்சமயம் இயங்கி வருகின்றன. இருப்பினும் திருநர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவே வேண்டியுள்ளது.
தங்களின் அடையாளத்தை வகுத்துக்கொண்டு, சமூகத்திற்குப் பங்களிக்கும் தேவேஷ்வர், சாக்ஷி இருவரின் வாழ்க்கைப் பயணங்களும் தனித்துவமானவை.
அடையாளத்தை நிலைநாட்ட அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களும் தன்னம்பிக்கையோடு மேற்கொண்ட முயற்சிகளும் குறிப்பிடத்தக்கவை.
'எனக்கு நானே உந்துதல்'
பல குரல்களில் பாடும் திறன் படைத்த சாக்ஷி ஹரேந்திரன் வளர்ந்து வரும் ஓர் உள்ளூர் நட்சத்திரம்.
பல சவால்களை எதிர்கொண்ட இவர், ஆர்வம், நம்பிக்கை, பயிற்சி ஆகியவையே கலைத்துறையில் முன்னேற தாம் செய்த முதலீடுகள் என்கிறார்.
ஆண் குரல், பெண் குரல் இரண்டிலும் பாடுவது சாக்ஷியின் தனித்துவமான வல்லமை. இது வெள்ளித்திரை நட்சத்திரம் விஜய் சேதுபதியின் கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாக்ஷியின் பாடலை ரசித்ததாக நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் தான் நடித்தபோது சாக்ஷியையும் அவரின் நளினத்தையுமே நினைவில் வைத்திருந்ததாகவும் விஜய் சேதுபதி அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
பலரறிய தன்னை திருநங்கையாக மேடையில் அடையாளப்படுத்திக் கொண்ட சாக்ஷியின் சாதனைகளுக்குப் பின் பல வலிகள் உண்டு.
அவர் இசையின்மேல் கொண்டிருந்த ஆர்வம் தொடர்ந்து பலரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய கலைத்துறையில் இவரை அடியெடுத்து வைக்கச் செய்தது, .
"வித்தியாசமான, குறுகுறுக்கும் பார்வைகளை எதிர்கொள்ளும்போது மனத்திற்கு சங்கடமாக இருக்கும். ஏதோ பெரிய குற்றம் செய்ததுபோல ஒரு கணம் அவை உணர வைக்கும்.
"ஆனால், இந்தச் சவால்கள் எனக்கு நானே ஆதாரமாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தின," என்றார் 27 வயது சாக்ஷி ஹரேந்திரன்.
குடும்ப உறுப்பினர்கள் தனது வாழ்க்கையில் தூண்களாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"சமூகத்தினரின் பார்வையால் துவண்டுவிடாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும். அதைத் தனிப்பட்ட விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல் முன்னேற வேண்டும். இதற்கான வலுவைத் தந்தது குடும்பத்தினரின் ஆதரவே," என்றார் சாக்ஷி.
ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது அடையாளத்தைக் குறித்து முடிவு எடுத்த வேளையில் குடும்பத்தினர் பக்கபலமாய் இருந்ததை சாக்ஷி நினைவுகூர்ந்தார்.
கலைத்துறை தனக்கு அளித்துள்ள அங்கீகாரங்களில் மிகவும் முக்கியமானது நடிகர் விஜய் சேதுபதியின் பாராட்டு என்றார் அவர்.
உணர்ச்சிப் பெருக்காலும் பெருமிதத்தாலும் நெகிழ்ந்த அவர், கலைத்துறை அனைவரையும் அரவணைக்கக் கூடியது என்பதற்கு தான் ஓர் எடுத்துக்காட்டு என்றார்.
திரைப்படத் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் சாக்ஷி.
"எனக்கு நானே உந்துதல். வேறு யாருமில்லை. எனது வளர்ச்சி என்னை ஊக்கப்படுத்துகின்றது.
"ஒவ்வொரு நாளையும் இதுவே எனது வாழ்வின் கடைசி நாள் எனும் விதமாகக் கொண்டாடி வாழ்வதில் நான் மகிழ்கிறேன்," என்று கூறினார் சாக்ஷி.
'ஒருபோதும் வருந்த மாட்டேன்' ்
விலங்குப் பராமரிப்பு நிலையம் நடத்திவரும் தேவேஷ்வரின் வாழ்க்கையில் சவால்களுக்குக் குறைவில்லை.
பிழைப்புக்காகத் தொடங்கிய விலங்குப் பராமரிப்புப் பணியே தேவேஷ்வரின் ஆர்வமாக உருவெடுத்தது.
வாழ்க்கையில் பற்றுக்கோல் ஏதும் இல்லாமல் தனிமையாக உணர்ந்த வேளையில், அவர் இத்துறையில் முழுவீச்சில் இறங்கினார். விலங்குகளின் அன்பில் தான் மனநிறைவு அடைந்ததாக இவர் கூறினார்்.
விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்தில் அதிகாரியாகப் பணியாற்றியபோது அவர் அன்றாடம் கையாண்ட விலங்கு வன்கொடுமைச் சம்பவங்கள் தேவேஷ்வரை நிலைகுலைய வைத்தன.
அந்த மனஉளைச்சலில் இருந்து விடுபட, தானே சொந்தமாக நாய்கள் பராமரிப்பு மையம் ஒன்றை அவர் தொடங்கினார்.
விலங்குப் பராமரிப்பு உதவியாளராக இருந்த காலத்திலேயே சொந்தமாக இப்படி ஒரு பராமரிப்பு மையம் தொடங்கவேண்டும் என்ற கனவு தேவேஷ்வருக்கு இருந்தது.
நிரந்தர வேலையில் இருந்த இவர் அதற்காகத் தனது வேலையைக் கைவிடவும் துணிந்தார்.
அதில் சவால்கள் இல்லாமலில்லை. தான் எதிர்நோக்கிய சவால்கள் அனைத்தையும் மனஉறுதியுடன் கடந்து சென்றார்.
'ஓ மை போவ்ட்' எனும் பராமரிப்பு மையத்தை 2018ஆம் ஆண்டில் தேவேஷ்வர் தொடங்கினார்.
"இந்த வர்த்தகம் தொழில் மட்டுமன்று. எனது அடையாளமும் புதிய வாழ்க்கைக்கான குறியீடும்கூட," என்றார் தேவேஷ்வர்.
"விலங்கு வதை தொடர்பான சட்டங்கள் சிங்கப்பூரில் குறைவு. பெரும்பாலும் அபராதம் கட்டுவதோடு குற்றவாளிகள் தப்பித்துவிடுகின்றனர்.
"இதுகுறித்தும் விலங்குப் பராமரிப்பு குறித்தும் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்வேன்," என்றார் 37 வயது தேவேஷ்வர் வனியப்பெருமாள்.
கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பான இடையூறுகளால் தனது வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் இவர்.
அவசியம் குறைந்த நிறுவனம் என்ற பிரிவில் ஒதுக்கப்பட்ட 'ஓ மை போவ்ட்' மையம் கிருமிப் பரவல் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டத்தில் முடங்கியது.
ஒரு கட்டத்தில் நிலைமையைச் சமாளிக்க இயலாமல், தனக்கு இல்லம்போல் திகழ்ந்த 'ஓ மை போவ்ட்' மையத்தை மூடவும் அவர் தயாரானார்.
"கடனில் மூழ்கியிருந்த எனக்கு அரசாங்க நிதியுதவி கிடைப்பதும் கடினமாக இருந்தது," என்று குறிப்பிட்ட தேவேஷ்வர், "ஆனாலும் நான் மனம் தளரவில்லை. தொடர்ந்து போராடினேன்," என்று கூறினார் தேவேஷ்வர்.
சிரமப்பட்ட வேளையில், பலதரப்பட்டோர், புரிதலுடன் தனக்கு உதவிக்கரம் நீட்டியதாக இவர் குறிப்பிட்டார். மீண்டும் இயங்கத் தொடங்கிய 'ஓ மை போவ்ட்' மையம் மெல்ல மீண்டு வந்தது தனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிப்பதாகக் கூறினார் தேவேஷ்வர்.
யாரையும் சார்ந்து செயல்படாமல், தன்னையும் தனது ஆற்றலையும் மட்டுமே நம்பி களத்தில் குதித்ததாக் கூறிய தேவேஷ்வர், இதுகுறித்து தாம் இதுவரை வருந்தியதே இல்லை என்றார். வருங்காலத்திலும் எத்தகைய சூழலிலும் ஒருபோதும் தனக்கு இந்த வர்த்தகம் குறித்து வருத்தம் இருக்காது என்றார்.

