அனுஷா செல்வமணி
இரவுநேரத்தில் வீட்டுக்குத் தாமதமாகத் திரும்பும் சிலர், உறங்கச் செல்லுமுன் முக ஒப்பனையை அகற்ற சோம்பல் அடைவார்கள். எவ்வளவு களைப்பாக இருந்தாலும் ஒப்பனையுடன் உறங்கச் செல்வது முகத்தில் விஷத்தைப் பூசிவிட்டுச் செல்வதற்கு சமம் என்கின்றனர் சில வல்லுநர்கள்.
உறக்கம் முக்கியமா ஒப்பனையை அகற்றிவிட்டுத் தூங்கச் செல்வது முக்கியமா என்று கேட்டால் பலர் உறக்கத்துக்கு முக்கியத்துவம் தருவதை அவர்கள் சுட்டினர்.
நீண்டகாலத்திற்கு இவ்வாறு ஒப்பனையை இரவில் அகற்றாமல் விடுவதால் சருமம் அதன் பொலிவை இழக்கும். களைப்பைப் பொருட்படுத்தாமல் இரவில் கட்டாயம் ஒப்பனையை அகற்றிவிடுவது நல்லது என சருமப் பராமரிப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் அமெரிக்காவில் பொது மக்களிடம் இதுகுறித்துக் கலந்துரையாடும் காணொளி 'டிக்டாக்' தளத்தில் பதிவிடப்பட்டது.
அதில் பங்கேற்ற பெண்கள் பலர் இரவுநேரத்தில் ஒப்பனையை அகற்றிவிட்டு உறங்கச் செல்ல சோம்பல் அடைவதாகக் கூறினர். 'முகப் பூச்சைக் கழுவினாலும் கண் மையை அகற்றப் பெரும்பாலான நேரங்களில் சோம்பலாக இருப்பதாக அப்பெண்கள் குறிப்பிட்டனர்.
'ரத்னம்ஸ் அலெர்ஜி அண்ட் ஸ்கின் சென்டர்' எனும் சிகிச்சை நிலையத்தின் இயக்குநரான தோல் மருத்துவர் கே.வி. ரத்னம், இவ்வாறு ஒப்பனையை அகற்றாமல் இருப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
ஒப்பனைப் பொருள்கள், சூரியக் கதிர்களிலிருந்து காத்துக்கொள்ளும் களிம்புகள் ஆகியவற்றில் ரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்படுவதை அவர் சுட்டினார். இயற்கை மூலப்பொருள்கள் சேர்க்கப்படுவதால் அவை சருமத்தை மென்மையாக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றார் அவர். இந்த ரசாயனங்கள் சருமத் துளைகளை அடைத்து முகப்பருக்களை உண்டாக்கும் என்றார் அவர்.
"நீண்ட நேரம் ஒருவர் ஒப்பனையை அகற்றாமல் இருப்பதால் தோல் சிவத்தல், அரிப்பு போன்றவை ஏற்படக்கூடும். அத்துடன் சருமம் ஒவ்வாமையால் பாதிக்கப்படக்கூடும். எனவே, ஒவ்வொரு நாளும் ஒப்பனையை மறக்காமல் கழுவிவிட்டுத் தூங்கச் செல்வது முக்கியம்," என்றார் மருத்துவர் ரத்னம்.
சருமத்தை மெருகூட்டும் எனும் தவறான நம்பிக்கையில் சிலர் ஒப்பனையை அகற்றுவதில்லை என்றார் அவர்.
பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஒப்பனைக் கலைஞர் மகேஸ்வரி, "ஒப்பனையை அகற்றாமல் உறங்கச் சென்றால், முகப் பருக்கள் அதிகமாகும். முகத்தில் இருக்கும் நுண்ணுயிரிகள் தலையணைமேல் படுவதால், தூங்கும்போது அவை மீண்டும் நம் சருமத்திற்குள் நுழைந்துவிடும்," என்று கூறினார்.
கண் ஒப்பனையை அகற்றாவிட்டால் கண்களில் தொற்று ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.
துடைப்பான்களைப் பயன்படுத்துவதை விடவும் நன்கு கழுவிவிட்டு உறங்குவதே பாதுகாப்பானது. சுத்தப்படுத்தும் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம் என்று கூறும் இவர், "சருமத்தைப் பாதுகாக்காமல் எவ்வளவு ஒப்பனையை அள்ளிப் பூசினாலும் பயனில்லை," என்றார்.

