இவ்வாண்டு சிங்கப்பூர் தமிழ்மொழி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஏப்ரல் 1ஆம் தேதி கெபுன் பாரு சமூக மன்றம், இயோ சூ காங் சமூக நிலையம் ஆகியவற்றின் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இணைந்து "வாங்க சிரிக்கலாம்" என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை கெபுன் பாரு பலநோக்கு அரங்கத்தில் நடத்தியுள்ளன.
நிகழ்வின் முக்கிய அம்சமாக கெபுன் பாரு அடித்தள உறுப்பினரான முத்தழகு மெய்யப்பனின் முயற்சியால் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக்கப்பட்ட ஆத்திசூடி நூல் மின்னிலக்க காட்சியாக வெளியீடு கண்டது.
கெபுன் பாரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்றி குவெக்கும் இயோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங்கும் ஆத்திசூடி இணைய மின்னிலக்க காட்சித் திரையை அதிகாரபூர்வமாக திறந்து வைத்தனர்.
"சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளான மலாய், சீனம், தமிழ், ஆங் கிலம் ஆகியவற்றின் வழியாகவும் இன நல்லிணக்கத்தை வலுப்பெறச் செய்யலாம் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது," என்றார் திரு மெய்யப்பன்.
"சிறியவர்கள்முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் ஆத்திசூடியின் நீதிக் கருத்துகள் சென்றுசேரும் வகையில் தீவு முழுவதும் உள்ள வீடமைப்புக் கழகக் கட்டடங்களின் மின்தூக்கித் தளங்களில் மின்னிலக்கக் காட்சியாக அங்குள்ள திரைகளில் அன்றாடம் காட்டப்படும் நோக்கத்துடன் இந்நூல் மொழிபெயர்க்கப் பெற்றது," என்றும் திரு மெய்யப்பன் குறிப்பிட்டார்.