சபிதா ஜெயகுமார்
அதிவேக வாழ்க்கைச் சூழலில் சிந்தனைக்கு இடம் கொடுக்காதவாறு தொழில்நுட்பம் நமது கவனத்தை அதிகம் ஆட்டிப்படைக்கிறது. 'இன்ஸ்டகிராம்', 'டிக்டாக்', 'யூடியூப்' என அவ்வாறு திசை திருப்புபவை எண்ணிலடங்கா. இவற்றின் மத்தியில் உள்ள இளையர்கள், தங்களின் சிந்தனைக்கு அதிக வேலை கொடுக்காமல் 'வெறுமனே திரையை உருட்டுதல்' (mindless scrolling) பெரும் பிரச்சினையாக உள்ளது. அடுத்தடுத்த காணொளிகளும் பதிவுகளும் சிந்திப்பதற்கு இடங்கொடுப்பதில்லை.
நாம் ஒவ்வொரு முறையும் புதுத் தகவலைப் பெறும்போது மூளைக்கு 'டொபமைன்' கிடைக்கிறது.
"சமூக ஊடகங்களில் நேரம் செலவிட செலவிட, முதல் முறை பெற்ற அதே அளவு இன்பத்தை அடுத்த முறை பெறமுடிவதில்லை. இதனால் போதைப்பொருள் போன்ற ஒருவகை போதையை உண்டாக்கும் இந்த 'டொபமைன்', ஒருவரை அடிமைப்படுத்துகிறது," என்று விளக்கமளித்தார் மனநல ஆலோசகர் பத்மா ஜெய்ராம், 48.
திறன்பேசிகள், சமூக ஊடகங்கள் வலம்வரும் யுகம், அதில் வளரும் இளையர்களுக்குச் சவால் விடுக்கிறது.
"திரையை எவ்வித நோக்கமுமின்றி நேரக்கணக்காக உருட்டுவதால் நேரம் விரயமாகிறது. என் வேலைகளைச் செய்ய சலிப்பாக இருக்கும்போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது இயல்பாகிவிட்டது. குறிப்பாக, அதிவிரைவாக வந்து சேரும் தகவல்கள் என் பொறுமையைக் குறைத்துவிட்டன," என்று 20 வயது பல்கலைக்கழக மாணவி மூலா வெங்கடேஷ் அஷ்வினி கூறினார்.
அதிக சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மூளையை மழுங்கடிக்கச் செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மூளைச் சோர்வு, கவனமின்மை எனப் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் இந்தப் பழக்கம் அன்றாட நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும்.
"நொடிக்கு நொடி புதுத் தகவல் மூளையைச் சென்றடையும்போது தகவல் சுமை அதிகரிக்குமே தவிர அவற்றை ஆராய்வதற்கு நேரம் தருவதில்லை என்பதால்தான் இதை, சிந்தனை அற்ற திரை உருட்டல் என்று அழைக்கிறோம்," என்று கூறுகிறார் திருவாட்டி பத்மா.
"நண்பர்கள், குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தைவிட சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதும் செயல்களிலும் வேலையிலும் முழு கவனத்தையும் செலுத்த இயலாமையும் அறிகுறிகளாகக் கொண்டு சமூக வலைத்தளத்தை அதிகளவு பயன்படுத்தும் போக்கை அடையாளம் காணலாம்," என்று ரேவன் ஆலோசனை நிறுவனத்தின் உளவியலாளர் மற்றும் மூத்த ஆலோசகருமான முனைவர் பிரவீன் நாயர் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தள நிறுவனங்கள் மக்களை ஈர்த்துத் தம் தளங்களில் அதிக நேரத்தைச் செலவழிக்க வைக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. இருப்பினும் நிறுவனங்களையும் நம்மையும் குறைகூறுவதில் பயனில்லை என்றார் திருவாட்டி பத்மா.
"மனித வாழ்வின் பயனற்ற பழக்கங்களில் ஒன்று இது. இதற்கான விழிப்புணர்வைப் பெற முயன்றால் இந்தப் பழக்கத்தை மாற்ற முடிவதோடு சமூக ஊடகங்களைக் கட்டொழுங்குடன் பயன்படுத்தும் பழக்கத்தையும் வளர்த்துக்கொள்ளலாம்," என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
"சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது, அன்றைய தினத்தைச் சமூக ஊடகங்களைப் பார்த்துத் தொடங்குவதையும் முடிப்பதையும் தவிர்ப்பது, பொழுது போக்க வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற மாற்றங்களை வாழ்வில் கொண்டுவந்தால் சிறப்பு," என்று முனைவர் பிரவீன் ஆலோசனைகள் கூறினார்.

