"இதைவிட விலை குறைவாக இருந்தால் செலுத்திய பணத்தைத் திரும்பத் தருவோம்" எனும் விளம்பர உத்தியை கையில் எடுத்துள்ளது கூகல் தேடுதளம்.
கூகல் தேடுதளத்தின் 'கூகல் ஃபிளைட்ஸ்' எனப்படும் விமானச் சேவைத் தேடுதளத்தைப் பயன்படுத்துவோருக்கு விலை குறைவாக உள்ள விமானப் பயணங்களைத் தேடித் தரும் சேவையைத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, அத்தளத்தின்வழி விமானப் பயணச்சீட்டுகளுக்குப் பதிவுசெய்யும்போது பயணத்துக்கு முன்னதாக வேறு எந்தத் தளத்திலும் அதைவிட குறைவான விலையில் பயணச்சீட்டுகள் இருந்தால், கூகல் கட்டண வேறுபாட்டைத் திரும்பத் தரப்போவதாகக் கூறியுள்ளது.
புதிய சேவையை கூகல் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறு எண்ணிக்கையினரிடம் பரிசோதித்து வருகிறது. சில குறிப்பிட்ட விமானச் சேவைகளை மட்டும் அது கண்காணித்து வருகிறது. ஆனால் காலப்போக்கில் அமெரிக்கா முழுவதுமுள்ள பயணங்களுக்கும் அனைத்துலகப் பயணங்களுக்கு அச்சேவையை விரிவுபடுத்த கூகல் திட்டமிட்டுள்ளது.
ஆனால் அச்சேவைக்கு பயணிகள் பதிவு செய்யும் விமானப் பயணம் தகுதி பெற வேண்டும். மேலும், 'புக் ஆன் கூகல்' என்ற தெரிவின்வழி, கூகல் தளத்தில் நேரடியாக விமானப் பயணச்சீட்டுக்குப் பதிவு செய்ய வேண்டும். அதாவது பயணிகள் தங்கள் விவரங்களையும் கட்டணத்தையும் கூகல் தளத்தின்வழி அனுப்பவேண்டும்.
பணம் செலுத்தப்பட்டு விட்டதாக வாடிக்கையாளர்களின் 'கூகல் பே' கணக்கில் செய்தி கிடைக்கும். திரும்ப வழங்கப்படும் பணமும் அக்கணக்கில் செலுத்தப்படும். 'புக் ஆன் கூகல்' சேவைக்கு விமான நிறுவனங்களிடம் கட்டணம் பெறவோ அவற்றுக்குப் பணம் செலுத்தவோ இல்லை என்று கூகல் கூறியது.
விலைகள் உயர்ந்து காணப்படும் நிலையில் கூகல் இந்தச் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.