எப்போதும் மூக்கடைப்பு, மூச்சுவிடும்போது சத்தம், அடிக்கடி சளி போன்ற அறிகுறிகள் இருக்கும் நாட்பட்ட மூக்கடைப்பு அரிதானது இல்லை என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் மார்க் டைக்விக்ஸ்.
வீட்டில் அல்லது அலுவலகத்தில் மூக்குக்கு எரிச்சலை ஏற்படுத்தும் பொருள்கள், ஒவ்வாமை, சுவாசக் குழாயில் தொற்று போன்றவற்றால் மூக்கு அடைப்பு ஏற்படலாம்.
மூக்கு துவாரங்களுக்கு நடுவில் உள்ள குருத்தெலும்பு நடுவில் இல்லாமல் ஒரு பக்கமாக இருக்கும்போது மூச்சுக்காக ஒரு பாதை பெரிதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருக்கலாம். இதனால் சிறிய மூச்சுப் பாதை அடிக்கடி அடைத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் டைக்விக்ஸ் குறிப்பிட்டார்.
காலப்போக்கில் மூக்கில் உள்ள எலும்பு வளையும்போது மூக்கடைப்பு ஏற்படக்கூடும் என்றார் அவர்.
பொடுகு, எச்சில், சிறுநீர் செல்லப் பிராணிகளின் முடி, போன்றவையும் தூசும் மூக்கில் உள்ள மெல்லிய திசுக்களைப் பெரிதாக்கி, அழற்சியை ஏற்படுத்தலாம். மேலும், உடல் நறுமணத் திரவங்கள், வாகனத்திருந்து வெளியேறும் கரும்புகை, சிகரெட் நாற்றம் போன்றவற்றாலும் மூக்கடைப்பு உண்டாகலாம் என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையில் பணியாற்றும் டாக்டர் சாரா ஹாக்மன் தெரிவித்தார்.
மேலும் சளி, காய்ச்சல், கொவிட்-19 கிருமித்தொற்று, போன்றவற்றாலும் வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம் போன்றவற்றில் மாற்றத்தாலும் மூக்கடைப்பு ஏற்படக்கூடும் என்று டாக்டர் டைக்விக்ஸ் விவரித்தார்.
இரண்டு வாரத்துக்கும் அதிகமாக மூக்கடைப்பு நீடித்தால், குறிப்பாக சளி ஏற்பட்டபிறகு அந்நிலை உண்டானால் சைனஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றார் டாக்டர் சாரா ஹாக்மன். காதுவலி, காய்ச்சல், கன்னத்தில் வலி போன்றவை சைனஸ் தொற்றின் அறிகுறிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சில வகை மருந்துகளின் பக்கவிளைவாக மூக்கடைப்பு ஏற்படலாம் என்றார் டாக்டர் டைக்விக்ஸ். அதனால் மருந்துகள் அல்லது சத்துமருந்துகள் போன்றவற்றை உட்கொள்ளும்போது, அவற்றின் பக்கவிளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியம் என்றார் அவர்.
முதலில் மெல்லிழைத் தாளில் மூச்சை நன்கு வெளியில் இழுத்துவிட்டு சளியை வெளியேற்றி மூக்கடைப்பை அகற்றலாம் என்று தி கிலீட்லண்ட் கிளினிக்கின் மூக்கு நிபுணர் டாக்டர் ராஜ் சிந்த்வானி பரிந்துரைத்தார். ஆனால் அதை வேகமாகச் செய்யாமல் மெதுவாகச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
கடையில் வாங்கக்கூடிய உப்புகலந்த (செலைன்) மூக்குத் தெளிப்பானை மூக்கில் அடித்து, மூக்கடைப்பை அகற்ற முயலலாம் என்று டாக்டர் மார்க் டைக்விக்ஸ் கூறினார்.
நிறைய தண்ணீர் குடிப்பதால் மூக்குச் சளி, கெட்டியாகாமல் எளிதில் வெளிவரும் என்றும், சுடுநீரில் குளிப்பதும் மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கும் என்றும் டாக்டர் சாரா ஹாக்மன் கூறினார்.
சில வகை ஒவ்வாமைக்குக் கடையில் ஆண்டிஹிஸ்டமின் மருந்துகளை வாங்கலாம். ஆனால் அவற்றை இரண்டு வாரத்துக்கு மேல் உட்கொள்ள வேண்டியிருந்தால் மருத்துவரை நாடுவது சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

