உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் மருந்து 'ஸ்டேட்டின்'. கல்லீரல் கொழுப்பை உற்பத்தி செய்ய பயன்படும் நொதியை (enzyme) இந்த மருந்து தடுக்கிறது. இதன்மூலம் உடலில் 'கெட்ட' கொழுப்பைக் குறைக்க இது உதவுகிறது.
உடலில் உள்ள மற்ற உயிரணுக்களுடன் சேர்ந்து கல்லீரல், 75 விழுக்காடு ரத்தக் கொழுப்பை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியைத் தடுப்பதன் மூலம், 'கெட்ட' கொழுப்பின் அளவு கணிசமாகக் குறைந்து, 'நல்ல' கொழுப்பின் அளவு உயர்த்தப்படுகிறது.
'ஸ்டேட்டின்' மாத்திரைகளில் பலவகை உள்ளன. அவை அனைத்தும் ஒரே மாதிரியாக செயல்பட்டு, ஒரே மாதிரியான பலனைத் தந்தாலும், ஒரு மாத்திரையைவிட இன்னொரு மாத்திரை உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம்.
கொழுப்பின் அளவையும் மருத்துவ நிலையையும் பொறுத்து, மருத்துவர் உங்களுக்கு 'ஸ்டேட்டின்' மாத்திரையைப் பரிந்துரைக்கலாம்.
உங்களுக்கு உகந்த மாத்திரை எது என்பதைக் கண்டறிவதற்கு முன்பு இரண்டு, மூன்று வகை 'ஸ்டேட்டின்'களை நீங்கள் உட்கொண்டு பார்க்க வேண்டும்.
ரத்த நாளங்களைத் தளர்த்தவும் இவை உதவும். இதனால் ரத்த அழுத்தமும் குறையச் செய்கிறது.
பக்கவிளைவுகள்
உடலில் கொழுப்பு அளவை ஒழுங்குபடுத்தி, இதர சுகாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவினாலும், 'ஸ்டேட்டின்' மாத்திரை பயன்பாட்டினால் பக்கவிளைவுகள் ஏற்படவே செய்கின்றன. 'ஸ்டேட்டின்' உட்கொள்வதால் குமட்டல், வாந்தி, தலைவலி, மூட்டுவலி போன்ற பொதுவான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலானோரால் இந்த மாத்திரைகளை உட்கொள்ள முடிகிறது. பக்கவிளைவுகள் உடையோருக்கு அவை இலேசானதாகவே உள்ளன. இந்த மாத்திரைக்கு உடல் பழகிக்கொண்டவுடன், பக்கவிளைவுகள் தானாக மறைந்துவிடும்.
மாற்று வழிகள்
உடலில் ரத்தக் கொழுப்பைக் குறைக்க இதர வழிகளும் உள்ளன. அவை பலவும் வாழ்க்கைமுறை மாற்றங்களுடன் தொடர்புடையவை.
சில உணவு வகைகள் ரத்தக் கொழுப்பைக் குறைக்க உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புல்லரிசிக்கூழ் (oatmeal), புருன்ஸ், ஆப்பிள், பேரிக்காய், கிட்னி பீன்ஸ், பார்லி, சால்மன் மீன், வாதுமை கொட்டை (வால்நட்), பாதாம் பருப்பு, ஆலிவ் எண்ணெய், கெனோலா எண்ணெய், முழு தானியங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
உங்களுக்குப் புகைப்பழக்கம் இருந்தால், ரத்தக் கொழுப்பையும் ரத்த அழுத்தத்தையும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்க அப்பழகத்தை நிறுத்துவது நல்லது.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் கொழுப்பின் அளவு சீராக இருக்க உதவும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சலில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பது சிறந்தது.
இதர மருந்துகள்
'ஸ்டேட்டின்' உட்கொள்வதால் உங்களுக்குக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், ரத்தக் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்து இருக்க மருத்துவர் வேறு வகை மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்.
நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை ஈர்த்துக்கொள்ளும் சிறுகுடல், அதை ரத்தத்தில் கலந்துவிடுகிறது. கொழுப்பை ஈர்க்கும் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேறொரு வகை மாத்திரை உதவுகிறது. அதன் பெயர் 'எஸிட்டிமைப்'.
ரத்தக் கொழுப்பு உடைய சிலருக்கு மருத்துவர் ஸ்டேட்டின், எஸிட்டிமைப் இவ்விரண்டையும் சேர்த்து பரிந்துரைக்கலாம். இதன்மூலம் சிறுகுடலில் கொழுப்பு ஈர்க்கப்படுவது குறைந்து, கல்லீரலின் கொழுப்பு உற்பத்தியும் குறைகிறது.
'ஸ்டேட்டின்' உட்கொள்வது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். கொழுப்பின் அளவு குறைந்தாலும், தொடர்ந்து இந்த மாத்திரையை எடுக்க வேண்டியிருக்கும்.
இல்லாவிட்டால், மாத்திரையை நிறுத்தியவுடன் கொழுப்பின் அளவு மீண்டும் உயரக்கூடும்.
ஒவ்வொருவருக்கும் மருத்துவத் தேவை வேறுபடுகிறது. எனவே, ஒரே தீர்வு அனைவருக்கும் பொருந்தாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.