சர்க்கரையைச் சேர்ப்பதைத் தவிர்க்க குறைந்தது 45 நல்ல காரணங்கள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உணவில் அதிக சர்க்கரை யைச் சேர்த்துக்கொள்ளும்போது 45 விதமான உடல்கேடுகள் ஏற் படுவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. நீரிழிவு நோய், கீல்வாதம், உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், ஆஸ்துமா, பல் சொத்தை, மன அழுத்தம், அகால மரணம் ஆகியவை உள்ளிட்ட நலக்கேடுகள் நிகழ்வதாக பிஎம்ஜே எனும் மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வு தெரிவித்தது.
ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட 8,600 ஆய்வுகளில் பெறப்பட்ட தரவுகளின் மீதான பகுத்தாய்வுகளை சீன, அமெரிக்க ஆய்வாளர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தினர். அளவுக்கு மீறிய சர்க்கரை உடல்நலத்தைக் கெடுக்கும் என்பது தெரிந்த ஒன்று. ஆனால் எது அளவுக்கு அதிகமான சர்க்கரை என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் முயன்றனர்.
அதன்படி நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ஆறு தேக்கரண்டி அளவு சர்க்கரையை மட்டும் சேர்த்துக்கொள்வது நல்லது என ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.
மேலும், சர்க்கரை சேர்க்கப்பட்ட சுவைபானங்களுக்கும் கீல்வாதம், இதயநோய் போன்ற பிரச்சினைகளுக்கும் இடையே அதிகத் தொடர்பு இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதனால் அத்தகைய சுவைபானங்களை வாரம் ஒரு முறை அருந்தலாம் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.
ஆய்வில் உணவுவகைகளில் இயற்கையாக உள்ள சர்க்கரையை ஆய்வாளர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, உணவுபானங்களின் உற்பத்தியின்போதும் அவற்றைத் தயாரிக்கும்போதும் சேர்க்கப்படும் சர்க்கரையை அவர்கள் கருத்தில் எடுத்துக்கொண்டனர்.
சிறிதளவு சர்க்கரையைக் குறைக்கும்போது உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக்கலாம் என்று இதுபோன்ற ஆய்வுகள் காட்டுவதாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் மாயா ஆடம் கூறினார்.
ஒரு நாளில் உணவு உடலில் உற்பத்தி செய்யும் எரிசக்தியில் சர்க்கரை 10 விழுக்காட்டுக்கு மேல் பங்கு வகிக்கக்கூடாது என்று சிங்கப்பூரின் ஹெல்த்ஹப் இணையத்தளத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது பெரும்பாலான பெரியவர்களுக்கு ஒரு நாளில் சுமார் 10 தேக்கரண்டி சர்க்கரைக்குச் சமமாகும்.
ஆனால் உலக சுகாதார நிறுவனம் நாளுக்கு அதிகபட்சம் ஐந்து தேக்கண்டி அளவு சர்க்கரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

