பணம் படைத்தவர்கள் பரம ஏழையானால் பார்க்க எப்படி இருப்பார்கள் என்ற கற்பனைத் தோற்றத்தை செயற்கை நுண்ணறிவுக் கருவியைக் கொண்டு மின்னிலக்க சித்திரங்களாக இந்தியாவைச் சேர்ந்த மின்னிலக்க ஓவியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
மைசூரில் வசித்துவரும் கோகுல் பிள்ளைதான் அந்த ஓவியர். மின்னிலக்க ஓவியங்களை உருவாக்கும் 'மிட்ஜர்னி' எனும் செயற்கை நுண்ணறிவுத் தளத்தை அவர் அதற்குப் பயன்படுத்தினார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்நாட்டைச் சேர்ந்த பெரு முதலீட்டாளர் வாரன் பஃபெட், இந்திய செல்வந்தர் முகேஷ் அம்பானி, டுவிட்டர் தளத்தின் தலைவர் எலோன் மஸ்க், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பெர்க், ஆகியோரின் புகைப்படங்களை வைத்து அவர்கள் மாறுபட்ட தோற்றத்தில் உள்ள சித்திரத்தை அவர் படைத்தார்.
அதை இன்ஸ்டகிராம் சமூக ஊடகத் தளத்தில் அவர் பதிவேற்றியது நகைமுரண்.
அவரது பதிவு தீபோல பற்றிக்கொண்டது. கிட்டத்தட்ட 10,000 பேர் அதற்கு விருப்பகுறி இட்டனர். நூற்றுக்கணக்கானோர் திரு கோகுல் இட்ட பதிவின்கீழ் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
சித்திரங்கள் பார்ப்பதற்கு உண்மைபோல இருந்ததாக இன்ஸ்டகிராம் பயனாளர் ஒருவர் குறிப்பிட்டார். டுவிட்டரின் எலோன் மஸ்க் மட்டும் பணக்காரத் தோற்றத்தை இழக்கவில்லை என்று கூறினார் மற்றொருவர்.

