சமையலறையில் உள்ள பொருள்களை வைக்கும் நெகிழிக் கலன் களுக்குப் பல குடும்பங்களில் பொதுப்பெயராகவே மாறிப்போன 'டப்பர்வேர்' நிறுவனம் தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
'டப்பர்வேர்' நிறுவனத்தின் பங்குவிலை நேற்று முன்தினம் கிட்டத்தட்ட 50 விழுக்காடு குறைந்தது. இதுவரை அந்நிறுவனத்தின் பங்குவிலைகளுக்கு இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டதில்லை.
கொவிட்-19 முடக்கத்தின்போது 'டப்பர்வேர்' கொள்கலன் களைப் பலரும் வாங்கிக் குவித்தனர். ஆனால் வழக்கநிலை திரும்பிய பின்னர், விற்பனை வெகுவாகக் குறைந்துவிட்டது.
77 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் அந்த அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்புகள்மீது பழையதாகிவிட்ட தோற்றம் படிந்துவிட்டது.
இளையர்களுக்கும் அந்தக் கலன்களின்மீதான ஆர்வம் குறைந்துள்ளது. அதிக வட்டியால் வர்த்தகத்தை நடத்த போதுமான பணம் இல்லை என்று டப்பர்வேர் கூறியுள்ளது.
அதனால் தொடர்ந்து இயங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் கூடுதல் முதலீடுகளைப் பெறாவிட்டால் நிறுவனத்தை மூடும் சூழ்நிலை வரலாம் என்றும் டப்பர்வேர் எச்சரித்தது. ஆள்குறைப்பு செய்தும் தனது இடங்களை விற்றும் அது பணம் புரட்ட முயன்றுவருகிறது.

