தமிழர், சீக்கியர், அசாமியர், மலையாள சமூகத்தினர் எனப் பல்வேறு இந்திய சமூகத்தினர் தங்களது புத்தாண்டை அடுத்த இரு நாளில் கொண்டாடுவதைப் போல தாய்லாந்து, கம்போடியா, மியன்மார், லாவோஸ் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளிலும் தொடங்கியுள்ள புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அடுத்த சில நாள்களுக்குத் தொடரும். இக்கொண்டாட்டங்கள் பல வண்ணங்கள் கொண்ட ஒரே இழை நாம் என்று எடுத்துரைக்கின்றன.
புத்தாண்டு, ரமலான் நோன்பு, புனித வெள்ளி, ஈஸ்டர் என தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் உள்ள பல்வேறு சமூகத்தினருக்கு இது வழிபாடுகளும் கொண்டாட்டமும் நிறைந்த காலகட்டம்.
பல்வேறு இந்திய சமூகங் களின் வழக்கப்படி வசந்தகாலம் தொடங்கி, வடக்கிலிருந்து தெற்குநோக்கிச் செல்லும் சூரியன் நிலநடுக்கோட்டை அடைந்து, பகலும் இரவும் சமமாக இருக்கும் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது யுள்ளதைக் குறிக்கும் வகையில் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டு விட்டது.
சித்திரை மாதத்தின் முதல் நாளில், அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி, புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புதிய ஆண்டின் பெயர் சோபகிருது என்று இந்துக்களின் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது.
புத்தாண்டன்று அதிகாலையில் குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்துக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பலரது வழக்கம். வேலை நாளில் பலராலும் அதைச் செய்ய முடியாவிட்டாலும் வீட்டில் வழிபாடுகள் நடைபெறும்.
புத்தாண்டு நாளில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலானவற்றை வழிபாட்டு அறையில் வைத்து வழிபடுவது வழக்கம்.
மலையாளச் சமூகத்தினரும் விஷுக் கனி என்று அழைக்கப்படும் இம்மரபைக் கடைப்பிடிப்பர். காலைக் குளியலை முடித்துவிட்டு வளத்தைக் குறிக்கும் பல்வேறு பொருள்களை முதலில் பார்ப்பது சிறப்பு என்பது அவர் களின் நம்பிக்கை.
தமிழர் மரபுப்படி புத்தாண்டு நாளில் உணவில் அறுசுவையும் இருப்பது சிறப்பு என்று கருதப் படுகிறது. பொதுவாக தமிழர் பண்டிகை நாள்களில் பாகற்காயைத் தவிர்ப்பார்கள். ஆனால் அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதைக் குறிக்க இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய அறுசுவையும் அன்றைய உணவில் இடம்பெறும்.
தமிழர்களைப் போலவே, பல்வேறு இந்திய சமூகத்தினரும் ஏப்ரல் 14ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடிவருகின்றனர். அசாமியர் உள்ளிட்ட வடகிழக்கு இந்தியர்கள் போஹக் பிஹு என்ற பெயரிலும், சீக்கியர் வைசாக்கி என்றும், பீகார் மக்கள் மைதிலி புத்தாண்டு என்றும் அந்நாளை அழைக்கின்றனர்.
மலையாளச் சமூகத்தினரின் புத்தாண்டான விஷு சனிக்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி கொண்டாடப்படும். புத்தாண்டின் சத்யா விருந்து அந்நாளின் மற்றொரு சிறப்பாகும்.
லாவோஸ், கம்போடியா, மியன்மார், தாய்லாந்து ஆகிய வற்றில் கெமர் இனத்தவருக்கான புத்தாண்டு இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். தாய்லாந்தில் சொங்ரான், லாவோசில் பி மாய், கம்போடியாவில் சங்கராந்தா, மியன்மாரில் திங்யென் என்ற பெயர்களில் புத்தாண்டு அழைக்கப்படுகிறது.

