ஆ. விஷ்ணு வர்தினி
புத்தம்புது கார் வகைகளுடன், கவரத்தக்க சலுகைகளுடன் பிரம்மாண்டமான அளவில் மீண்டும் நடைபெறவுள்ளது கார்ஸ்@எக்ஸ்போ கண்காட்சி.
ஈராண்டுகளுக்குப் பிறகு எஸ்பிஎச் மீடியாவால் ஏற்பாடு செய்யப்படும் இக்கண்காட்சி, தற்போதைய, புது கார் வாடிக்கையாளர்களை ஈர்க்க உள்ளது. அனைவரின் தேவைகளுக்கும் ஏற்ற பொருள்களை ஒரே தளத்தில் இது ஒருங்கிணைக்கிறது.
வரும் வார இறுதியில் இரண்டு நாள்கள் (15, 16 ஏப்ரல்) நீடிக்கும் இக்கண்காட்சி, எக்ஸ்போ மண்டபங்கள் 3பி, 4 ஆகியவற்றில் நடைபெறும். காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை பொதுமக்கள் கண்காட்சிக்குச் சென்று வரலாம்.
புது கார்கள், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார்கள், மின்சாரக் கார்கள் முதலியவை மக்களின் பார்வைக்கு வருகின்றன. இவற்றை விற்கும் 34 நிறுவனங்கள் கார்ஸ்@எக்ஸ்போவில் பங்குகொள்ளும். மொத்தம் 28 சாவடிகள் இரு மண்டபங்களிலும் இடம்பெறுகின்றன. வெவ்வேறு விலைகளில், வெவ்வேறுத் தரங்களில் உள்ள கார்களை மக்கள் எதிர்நோக்கலாம்.
ஆவ்டி (Audi), ஹுயுண்டாய், பிஎம்டபிள்யு முதலிய பிரபல கார் விற்பனையாளர்கள் உள்ளிட்டோரின் சலுகைகளும் மக்களுக்காகக் காத்திருக்கின்றன.
கார்ஸ்@எக்ஸ்போவில் புது அல்லது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவோர் $500 வரையிலான எஸ்பிசி பணப் பற்றுச்சீட்டுக்களைப் பெற வாய்ப்பு உண்டு.
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார்களை கார் வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்கள் எஸ்பிசியின் $115 மதிப்பிலான 'ஸ்பீடிகேர்' கார் பராமரிப்புப் பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொள்ளலாம்.
கண்காட்சிக்கு வருகை புரியும் முதல் ஆயிரம் பேர் சிறப்புப் பரிசுகளையும் தட்டிச் செல்ல இருக்கின்றனர்.
கார்கள் மட்டுமின்றி, கார் பராமரிப்புக்குத் தேவைப்படும்பொருள்களும் கண்காட்சியில் இடம்பெறும். சக்கரங்கள், இயந்திர எண்ணெய், மசகுப்பொருள்கள் முதலியன விற்பனைக்கு வைக்கப்படும்.
சிங்கப்பூர் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைத் தொடர்ந்து அதிக அளவில் ஊக்குவித்து வருகின்றது. 2030ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட வசதிகள் 60,000ஆக உயரக்கூடும்.
இந்நிலையில், கார்ஸ்@எக்ஸ்போவின் 'ஸ்கூல் ஆஃப் ஈவி' சிறப்புப் பிரிவு மக்கள் கவனிக்கத்தக்க அங்கமாகும்.
மின்சார வாகனங்கள் குறித்து இப்பிரிவு தெளிவுபடுத்தும்.
அவற்றை பராமரிப்பது எப்படி, மின்னூட்டுவதில் கருத்தில் கொள்ளவேண்டியவை யாவை, எங்கே அவற்றுக்கு மின்னூட்டலாம் என மக்களின் சந்தேகங்களை இப்பிரிவு தீர்த்துவைக்கும்.
கிஸ்92, ஒன் எஃப்எம்91.3 வானொலிக் கலைஞர்களும் மக்களை இரு நாள்களிலும் மகிழ்விக்க உள்ளனர்.

