நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கமும் மஸ்ஜித் அப்துல் கபூர் பள்ளிவாசலும் முதன்முறையாக இணைந்து அண்மையில் நல்லிணக்க நோன்பு துறப்பு நடத்தின.
இந்திய முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் குழுவின் www.imcsc.sg இணையத்தளம் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உணவுப்பொருள்களும் நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
கடந்த வியாழக்கிழமை பள்ளிவாசலின் பன்னோக்கு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமய முறைப்படி பள்ளிவாசலின் இமாம் உஸ்தாத் அஜீஜூல்லா ஹசனி இறைவசனங்களை ஓதினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம், "பல இன, சமய நல்லிணக்கம் வலுப்பெறவும் ஒன்றுபட்ட சமூகமாக நாம் உறுதியுடன் வளரவும் சமூக அமைப்புகள் இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்," என்றார்.
பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் போற்றி மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர் தெரிவித்தார்.
பல இன மக்களுடன் சமூகத் தலைவர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏறத்தாழ 250க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
"இந்த நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் இஃப்தார் என்பதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டேன். பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூரில் இத்தகைய நிகழ்ச்சிகள் புரிந்துணர்வைப் பலப்படுத்த உதவுகின்றன," என்று கூறினார் அரசாங்க ஊழியரான நாராயணன் ஆண்டியப்பன், 52.
சுயதொழில் செய்துவரும் 52 வயது அப்துல் ரஹீம், "அனைவருடனும் கூட்டாக இந்நிகழ்வில் பங்குகொண்டது கூடுதல் மகிழ்ச்சியளித்தது," என்றார்.

