உலக மொழிகளுள் மூத்த, வளம் குன்றாத, ஆளுமை நிறைந்த மொழியாகத் தமிழ் மொழி நிலைத்து நீடிப்பதையும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஆங்கில மொழிக் கலப்பினால் தமிழ் மொழியின் புழக்கம் குறைந்து வருவதையும் சுட்டிய மாணவர்களின் மேடைப் படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
தமிழ்மொழி விழாவையொட்டி நடைபெற்ற 'தமிழும் அழகும்' நிகழ்வுக்கு அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் குழு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கம் நிரம்பிவழியும் அளவுக்கு 300க்கும் மேற்பட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். திருக்குறளில் உள்ள நன்னெறிகளையும் நற்பண்புகளையும் வாழும் வழிமுறைகளையும் எடுத்துரைத்த படைப்புகளும் திரையிசைப் பாடல்களில் பொதிந்துள்ள வாழ்வியல் தத்துவங்கள் நிறைந்த உரையாடல்களும் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. வெற்றிபெற்ற குழுக்களுக்கு பரிசுக் கிண்ணமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட 'தி மீடியா' நிர்வாக இயக்குநர் திரு அ. முகமது அலி, "தமிழர்களின் அடையாளமான தமிழ் மொழியினைப் பேணிக்காத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது," என்றார்.
"தமிழ்மொழியின் வருங்காலக் காவலர்களான இளையர்கள் மொழிசார்ந்த பல்வேறு படைப்புகளில் ஈடுபட வேண்டும். அதுவே தமிழ்மொழி மீதான புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்தும்," என்றார் அழகப்பா கல்விநிலைய முன்னாள் மாணவர் குழுவின் துணைத்தலைவர் திரு இரா. புகழேந்தி.
"இளம் மாணவர்களின் கருத்தூன்றிய படைப்பு அவர்கள் மீதான நம்பிக்கையை அதிகரித்தது," என்று கூறினார் தனியார் நிறுவனக் கணக்காளரான சென்ராஜ் அழகர்சாமி, 46.
"சிறார்கள் குறட்பாக்களைச் சரியான உச்சரிப்புடனும் பொருள்புரிந்தும் அரங்கேற்றிய விதம் சிறப்பு. என் பிள்ளைகளையும் திருக்குறள் படிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளேன்," என்றார் சுகந்தி சுப்பிரமணியன், 45, என்னும் இல்லத்தரசி.
இந்நிகழ்வில் பங்குகொண்ட உயர்நிலைப்பள்ளி மாணவரான அர்ஜுன் குலசேகரன், 15, "அடுத்தமுறை நானும் இது போன்ற மொழிசார் போட்டிகளில் பங்கெடுத்து பாராட்டுகள் பெறுவேன்," என்றார்.
செய்தி: மோனலிசா

