உலக ஆட்டிசம் விழிப்புணர்வு மாதத்தையொட்டி ஆர்வமுள்ள சமூக அமைப்புகளுக்கான பயிற்சிகள் பற்றி பல இயக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆட்டிசம் நெட்வொர்க் சிங்கப்பூரின் ஏற்பாட்டில் இவை
நடத்தப்பட உள்ளன.
தெளிவாக வகைப்படுத்த இயலாததொரு வளர்ச்சிக் குறைபாடான மதியிறுக்கம் (ஆட்டிசம்), ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்துப் பேசாமல் இருப்பது, காரணம் இல்லாமல் அழுவது அல்லது அடம்பிடிப்பது முதலிய குணங்கள் செயல்பாடுகளின் மூலம் கண்டறியப்படுகிறது.
நடத்தப்படவிருக்கும் இயக்கங்கள் நம் சமூகத்திலுள்ள ஆட்டிசம் உள்ளோருக்கு எவ்வாறு கூடுதல் ஆதரவு அளிக்கலாம் என்பதைப் பற்றி சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
'டைம் டு ஆக்ட்' (Time to Act) என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இவ்வியக்கத்தின் கீழ் உரைகளும் உரையாடல்களும் நடத்தப்படவிருக்கின்றன.
"ஏழு வயது முதல் 18 வயது வரை இருப்போருக்கு சிறப்பு மாணவர் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்வதுண்டு. அதுமட்டுமல்லாமல், ஆறு மாதம் முதல் ஆறு வயது சிறாருக்கான ஆரம்ப தலையீடு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன," என்று ஆசிய பெண்கள் நல கழகத்தின் இளைஞர் இயலாமை சேவை பிரிவின் மூத்த மேலாளர் சுஜாதா நந்திதா பீட்டர், 48, கூறினார்.
ஆட்டிசம் கண்டறியப்பட்டு அதை தன் முன்னேற்றத்திற்கு ஓர் தடையாக எண்ணாமல்
வணிகவியல், கணக்கியல் இளங்கலை பட்டம் பெற்ற திரு தினேஷ் ஜெயகுமார், 35, ஆரம்பத்தில் வேலை கண்டுபிடிப்பதற்கு ஒன்றரை ஆண்டு ஆனது. தற்போது, தினேஷ் சுகாதார அமைச்சின் நிறுவன சேவைகள் பிரிவில் உதவி நிர்வாகியாக பணியாற்றுகிறார்.
"ஆட்டிசம் உள்ளோரை குறைகள் இருப்பவர்களாக பார்க்காமல் அவர்களையும் சமூகத்தில்
ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களும் சிறந்த திறனாளர்களாக முடியும்," என்று அவரது தாயார் திருமதி ஜெயகுமார் ஜமுனாராணி, 61, கூறினார்.
மேலும், இளம் பெற்றோர் ஆட்டிசம் உள்ள தங்களது பிள்ளைகளுக்கு எவ்வாறு ஆதரவு அளிக்கலாம் என்ற தகவல்கள் சுலபமாக கிடைக்க வழி வகுக்கவேண்டும் எனக் கருதுகிறார் இவர்.
ஊனமுற்றோர் விழிப்புணர்வு உரை மார்கரெட் டிரைவிலுள்ள ரெயின்போ நிலையத்தில் ஏப்ரல் 13ஆம் தேதியன்று ஆரம்பகாலக் குறுக்கீட்டுத் திட்டம், சிறப்புக் கல்வி, சிறப்பு மாணவர் பராமரிப்பு சேவைகள் குறித்து தகவல்கள் பகிரப்படும். நேரம்: பிற்பகல் மணி 3 முதல் மாலை மணி 4.30 வரை.
ஈடன் சென்டர், ஆட்டிசம் சங்கத்தின் நடவடிக்கை நிலையம் சுற்றுலா ஏப்ரல் 17ஆம் தேதியன்று இவ்விரு நிலையங்களில் ஒவ்வொரு தனிநபருக்காகவும் வழங்கப்படும் சேவைகளைப் பற்றியும் திட்டங்களைப் பற்றியும் இச்சுற்றுலாவில் கலந்துகொண்டு கற்றுக்கொள்ளலாம். நேரம்: காலை மணி 10 முதல் காலை மணி 11.30 வரை.
இதுபோல் மேலும் பல நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவற்றுக்கு பதிவு செய்யவும் bit.ly/ansopenhouses என்ற இணையத்தளத்தை நாடலாம்.

