நியூஜென் ஃபண்ட் 2018ஆம் ஆண்டு முதல் ரமலான் மாதத்தில் முன்னாள் கைதிகளின் குடும்பங்களுக்கு இஃப்தார் அன்பளிப்புகளை வழங்கி வருகிறது.
லாபநோக்கமற்ற அமைப்பான நியூஜென் ஃபண்ட் திருந்திய கைதிகளின் குடும்பங்களில் தலைமுறை தாண்டிய குற்றச்
செயல்களைத் தடுப்பதற்கு முனைகிறது. இது குடும்பங்களுடன் நெருங்கி, முக்கியமாக பிள்ளைகளின் நலனைக் கவனத்தில்கொண்டு அதற்கு உதவி வருகிறது. இதுவரை ஏறத்தாழ ஆயிரம் பிள்ளைகள் நியூஜென்னின் திட்டங்கள், சேவைகளால் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டும் 140 குடும்பங்களுக்கு இஃப்தார் அன்பளிப்புகளை வழங்கி சிறப்பித்தது.
போதைப்பொருள் விற்பனைக்காக கணவர் பன்னிரண்டு ஆண்டுகால சிறைவாசம் சென்றபோது பத்துமாத கைக்குழந்தையுடன் தனியாக விடப்பட்டார் திருவாட்டி சலிமா (உண்மைப் பெயரல்ல).
நீண்டகால விசாவில் சிங்கப்பூருக்கு வந்து, தமிழகத்தில் பிளஸ் 2 வரை மட்டுமே பயின்றிருந்த அவருக்கு உதவ குடும்பத்தாரோ நண்பர்களோ யாரும் இல்லை.
தற்போது இல்லப் பணியாளராக மாதம் $1,500 மட்டுமே ஈட்டி வரும் அவருக்கும் அவரின் 13 வயது மகனுக்கும் கடந்த மூன்றாண்டு காலமாய் கைகொடுத்து வருகிறது நியூஜென் ஃபண்ட்.
திருவாட்டி சலிமா உள்ளிட்ட முன்னாள், தற்சமயம் சிறை யிலிருக்கும் கைதிகளின் குடும்பத்தாருக்கும் ரமலான் உற்சாகத்தைப் பரப்ப முற்பட்டது நியூஜென் ஃபண்ட் அமைப்பு. ஏப்ரல் 12ஆம் தேதி அன்று மாலை காத்திப் வட்டார உள்துறைக் குழு NS மன்றத்தில் கிட்டத்தட்ட 500 பேர் ஒன்றுகூடி இஃப்தார் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
நியூஜென்னின் இஃப்தார் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டு கொண்டாடி மகிழ்ந்த 140 குடும்பங்களில் திருவாட்டி சலிமாவும் அவரின் மகனும் அடங்குவர். இலவச துணைப்
பாடத் திட்டம் அவரின் மகனது கல்விக்குப் பக்கபலமாய் இருந்து வருகிறது.
"பொது நிகழ்வுகளுக்கோ கொண்டாட்டங்களுக்கோ செல்லும்போது எங்களை சிலர் வித்தியாசமாகப் பார்ப்பதுண்டு. அது எங்களை சங்கடப்படுத்தும். நியூஜென் நிகழ்வுகளிலோ எங்களைப் போன்றோரைச் சந்திக்க முடிகின்றது.
"எனது மகனுக்கு நண்பர்கள் கிடைத்துள்ளனர். இங்கு நாங்கள் அரவணைக்கப்படுகிறோம்; குடும்பமாக திகழ்கிறோம்," என்றார் 35 வயது திருவாட்டி சலிமா.
நோய்ப்பரவல் காலத்துக்குப் பிறகு முதன்முறையாக நேரடி நிகழ்வாக நடைபெறும் நியூஜென்னின் இஃப்தார் கொண்டாட்டத்தில் உள்துறை துணை அமைச்சர் டாக்டர் முகமது ஃபைஷல் இப்ராகிம் கலந்துகொண்டார். தேசிய வளர்ச்சித் துணை அமைச்சருமான அவர், ஒரு சமூகமாக குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் பல்லினத்தோரும் ஒன்றுகூடி மகிழ்வதற்கும் இதுபோன்ற கொண்டாட்டங்கள் வாய்ப்பளித்ததாகக் கூறி நியூஜென்னின் இம்முயற்சியைப் பாராட்டினார்.
டாக்டர் ஃபைஷல் இப்ராகிம், பிள்ளைகளே நமது எதிர்காலம் என்பதை வலியுறுத்தினார்.
நியூஜென் போன்ற அமைப்புகளுடன் இணைந்து அரசாங்கம் தொடர்ந்து பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும், அவர்கள் உகந்த முறையில் வளர்வதற்கு உதவிக்கரம் நீட்டும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மாது அன்பளிப்பு பைகளைப் பெற்றுக்கொண்டார்.

