சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் வேரூன்றவும் தீவு முழுவதும் தமிழ் ஒலிக்கவும் செய்தவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி.
தமிழ்ச் சமூகத்தின் குரலாக விளங்கி, கல்வி, வாழ்வாதாரம், உரிமை என மக்களுக்கு விழிப்பூட்டி தமிழர் அடையாளத்தை முன்னிறுத்தியவர் கோசா.
அவர் ஏற்படுத்திய எழுச்சியின் அதிர்வலைகள் இன்றும் தமிழர், இந்திய சமூகங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன.
இன்று அவரின் 120வது பிறந்த நாளாகும். இந்நாள் வரை நம் நினைவிலிருந்து அகலா அவரின் பரிமாணங்களை சிங்கப்பூர்த் தமிழர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
சமூகச் சீர்திருத்த முன்னோடி
சிங்கப்பூரின் அடையாளத்தில் தமிழர்கள் இன்றியமையாதோராக விளங்கச் செய்த சிங்கப்பூர்த் தமிழர் சீர்திருத்தச் சங்கம், தமிழர் பிரதிநிதித்துவ சபை, தமிழ் முரசு ஆகியவை கோ. சாரங்கபாணி குறித்த நினைவுகளுடன் இரண்டறக் கலந்தவை.
இவற்றின்மூலம் அவர் வழிநடத்திய நடவடிக்கைகள் இந்தியச் சமூகத்தின் குரலை அதிகார வர்க்கத்துக்கு எட்டுமளவில் ஓங்கி ஒலிக்கச் செய்தன.
தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, 21 வயதில் சிங்கப்பூரில் காலடி எடுத்து வைத்தவர் கோசா. கணக்காளர் பணியில் தேர்ந்தவரான அவர், அக்காலத் தொழிலாளர்களுக்கான முதலாளிகளாக விளங்கிய கண்காணிகளின் சுரண்டலும் தமிழரின் பரிதவிப்பும் அவருள் கிளர்ச்சியை ஏற்படுத்தின.
1930ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழர் சீர்திருத்தச் சங்கம் உருவாக்கம் கண்டது. கோசாவின் அபிமானத்துக்குரிய பெரியார் ஈ.வெ. ராமசாமியின் சுயமரியாதை கொள்கைகளே இவ்வமைப்பின் அடிநாதம். தமிழர் சமூகத்தின் பின்னடைவுக்கு காரணமாய் இருந்த மூட நம்பிக்கைகளைத் தகர்க்க இது இயங்கியது.
விதவை மறுமணம், கலப்புத் திருமணம் ஆகியன கோசா குரல் கொடுத்த சமூகச் சீர்திருத்தங்களில் சில. அதற்கேற்ப, லிம் பூன் நியோ எனும் சீன இனத்தவரை தம் மனைவியாக அவர் கைப்பிடித்தார்.
எழுச்சியின் முத்திரை
1929ல் 'முன்னேற்றம்' வார இதழின் துணை செய்தி ஆசிரியராக கோசாவின் பொதுநலப் பயணம் துவங்கியது. அப்பயணம் அரைநூற்றாண்டுக்கு மேல் நீடித்தது.
தமிழர்கள் பலவீனமாய் இருப்பதால் இந்தியச் சமூகம் பலமற்றதாய்க் கிடக்கிறது எனும் அவரின் எண்ணம் அவரது சீரிய நோக்கத்தைப் பறைசாற்றியது.
சமூகத்தின் குரலாக ஒலிக்கும் நோக்கில் கோசா 1935ஆம் ஆண்டில் நிறுவிய தமிழ் முரசு, ஒரு காசு விலையில் ஏழை எளியோரின் கைக்கு எட்டியது.
வார இதழான தமிழ் முரசு அவரின் சீர்திருத்த இயக்கத்தின் ஊடகமாக மட்டுமன்றி, கருத்து, கலை சுதந்திரத்துக்கான மேடையாகவும் திகழ்ந்தது.
1958ஆம் ஆண்டில் தமிழ் முரசில் அச்சுக் கோக்கும் ஊழியராக இணைந்த திரு நடராசனின், 84, மனத்தில் மக்களைக் கவரும் ஆளுமையாகவும், அஞ்சாத தலைவராகவும் துடிப்புமிக்க செய்தி ஆசிரியராகவும் கோசா தொடர்ந்து நிலைத்திருக்கிறார்.
"கோசா ஏற்றத்தாழ்வு பாராமல் எல்லோரையும் சமமாக நடத்தி, எல்லா இடங்களிலும் சமூக ஒற்றுமையை வலியுறுத்திய இலட்சியம் மகத்தானது," என்றார் தற்போது தமிழ்முரசில் பிழைதிருத்துநராகப் பணியாற்றும் திரு நடராசன்.
பிடுங்கி நடப்பட்ட அயலக தமிழர்கள் வேர் மறவாமல் இருக்கவேண்டும்; வேர் பரப்பி சிங்கப்பூரில் தழைக்கவேண்டும், உதவிபெறும் சமூகமாக அன்றி, உதவும் சமூகமாக தமிழர்கள் நிலைக்க வேண்டும். இக்கனவு நனவாக சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்கு தமிழ் மக்களை கோசா ஊக்குவித்ததை திரு நடராசன் நினைவுகூர்ந்தார்.
தமிழ் முரசின் மூலமும் நேரிலும் மக்களை ஊக்குவித்து வந்த கோசாவின் போராட்டம் கிட்டத்தட்ட 20,000 பேரைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கச் செய்தது.
தமிழ் முரசு மட்டுமன்றி, 'சீர்திருத்தம்', 'ரிஃபார்ம்' எனும் ஆங்கில மாத இதழ், 'இந்தியன் டெய்லி மெயில்' எனும் ஆங்கில நாளிதழ் ஆகியன கோசாவின் வழிநடத்தலின்கீழ் சமூக நிலவரத்தை தோலுரித்துக் காட்டின.
தமிழ்ச் சமூகத்தைத் தாண்டி, தமிழர் அல்லாத இந்தியச் சமூகத்தையும் விழிப்படைய இவற்றை பயன்படுத்தினார் கோசா.
இன்று சிங்கப்பூரின் கொள்கை அமைப்பில் மையக் கருவாக கருதப்படும் சமூகப் பிணைப்பு கோசாவின் அடிப்படைக் கோட்பாடாக இருந்துள்ளது என்பது அவரின் பிரசாரங்களில், தலையங்கங்களில் வெள்ளிடை மலை.
தமிழ்மொழி சிங்கப்பூரில் அதிகாரத்துவ மொழியாக தலைநிமிர வித்திட்ட கோசா. வாழும் மொழியாக தமிழ் நிலைபெறுவதற்கான அடித்தளத்தை அவரின் முற்போக்கு சிந்தனை அன்றே உருவாக்கி திடப்படுத்தி இருந்தது.
தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வந்திருந்தோர், சாதி, சமய பேதமில்லாமல் தமிழ்மொழியோடும் ஒன்றுபடும் கண்ணோட்டத்துடன் 'தமிழர் திருநாள்' 1952ல் உதயமானது.
சிதறிக் கிடந்த 50க்கும் மேற்பட்ட தமிழர், தமிழ்மொழி அமைப்புகளை இணைத்து தமிழர் பிரதிநிதித்துவ சபையை உருவாக்கியதைத் தொடர்ந்து, இவ்விழாவை கோசா அறிமுகப்படுத்தினார்.
அந்நாளில் 10,000க்கும் மேற்பட்டவர்களை திரளாக ஆண்டுதோறும் ஈர்த்த இதுவே, இன்றைய தமிழ்மொழி விழாவிற்கான முன்னோடியாகும்.
கோசா அதே ஆண்டில் அறிமுகப்படுத்திய 'மாணவர் மணிமன்ற மலர்', இளையர்களைப் படைப்பாளர்களாக உருமாற்றிய ஒரு மகத்தான தளம்.
அதே சமயத்தில் 'எழுத்தாளர் பேரவை', ஓர் இலக்கியக் களமாக விளங்கியது.
"சிங்கப்பூர் இலக்கியத்துறையின் பல பிரபல முகங்களுக்கு 60களில், 70களில் மாணவர் மணிமன்ற மலரே தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
தமிழ் முரசு தொடங்கிய எழுத்தாளர் பட்டறை, சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களுக்கு இடையே பாலம் அமைக்க வழி வகுத்தது," என்றார் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன்.
கவிஞர்கள், கதாசிரியர்கள், நாடகக் கலைஞர்கள் என பல தரப்பட்டவர்கள் மலர வழிகோலிய மாணவர் மணிமன்ற மலர், இன்று மாணவர் முரசாக தமிழ் முரசுடன் தொடர்கிறது.
தமிழ்க் கல்வித்துறை ஆசான்
ஒவ்வொரு தமிழ் மாணவருக்கும் தமிழ் கற்கும் வாய்ப்பையும் ஒவ்வொரு தமிழாசிரியருக்கும் உரிய அங்கீகாரத்தையும் ஏற்படுத்துவதில் கோசாவின் உன்னதப் பங்கு இருந்தது.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பள்ளிகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இயங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவற்றுள் 23 பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவை கோசா பெற்றுத் தந்தார்.
அவற்றின் நிர்வாகத்தைக் கவனிக்கும் தமிழ்க் கல்விக் கழகத்தை 1948ல் உருவாக்கி அதன் தலைவராகவும் அவர் செயல் பட்டார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை 1956ல் அமைத்த கோசாவின் தடம், வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை என்றார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார்.
பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் இடம்பெறுவதற்கான போட்டிக்கு இடையே, அவர் தமிழ் மொழிக்காக அயராது போராடி சாதித்தது வியக்கத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.
"பல துறைகளில் வளர்வதற்கும் மிளிர்வதற்கும் தமிழசாரியர்களுக்குத் தளம் அமைத்துக் கொடுத்தார் கோசா. அவரின் திடமான சிந்தனைகள், தொடர்ந்து தமிழாசிரியர்களுக்கு ஊட்டச்சத்தாக விளங்குகின்றன," என்றார் அவர்.
இன்றும் ஓங்கும் 'தமிழவேள்'
1974ஆம் ஆண்டில் கோ. சாரங்கபாணி மறைந்தாலும், அவரின் நினைவலைகள் தொடரலையாய் நிலைத்துள்ளன. சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்துறையில் தடம்பதித்தோரை அங்கீகரிக்கும் 'தமிழவேள் விருது' கோசாவின் ஒரு நினைவு முத்திரை.
இவ்விருது 1996ஆம் ஆண்டில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தால் தொடங்கப்பட்டது.
சிறப்புமிகு தமிழவேள் விருதினைப் பெற்றுள்ள மூத்த படைப்பாளர்களான மா. இளங்கண்ணன், கவிஞர் ஐ. உலகநாதன், கவிஞர் க.து.மு. இக்பால், பாத்தேறல் இளமாறன், பொன். சுந்தரராசு, கவிஞர் அமலதாசன், இராம. கண்ணபிரான், எம்.கே. நாராயணன், செ.ப.பன்னீர் செல்வம் முதலியோரின் எழுத்து, மாணவர் மணிமன்ற மலரில் அறிமுகம் கண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழாசிரியர்களும் மாணவர்களும் கோசாவை நினைவுகூரும் வண்ணம் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் ஆண்டுதோறும் 'தமிழவேள் நினைவுக் கருத்தரங்கு' எனும் நிகழ்வை முன்னெடுத்து வருகிறது.
பல்லினச் சமூகமான சிங்கப்பூரில் நாட்டுப்பற்றை, ஒற்றுமையை, வலியுறுத்திய கோசாவின் வாழ்க்கை இளையருக்கு ஒரு படிப்பினை என தெரிவித்தார் தமிழவேள் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கலைவாணி இளங்கோ.
"இன்றைய இளையர்கள் நாளைய தலைவர்களாக உருவாக கோசாவின் வாழ்க்கையும் அவர் விட்டுச்சென்ற தடமும் தொடர்ந்து அடித்தளமாக இருக்கும்," என்றார் அவர்.