அனுஷா செல்வமணி
தமிழ் தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பத்தின் பாரம்பரியத்தையும் அதன் அடிப்படை நுணுக்கங்களையும் பொதுமக்கள் அடுத்த மாத இறுதியில் நடக்கவிருக்கும் பயிலரங்கு மூலம் அறிந்துகொள்ளலாம்.
சிங்கப்பூர் மரபுடைமை விழாவை ஒட்டி களரி பயிற்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் பயிலரங்கு அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் அமையவுள்ளது. பல தலைமுறைகளாக வெவ்வேறு பரிணாமங்கள் எடுத்துள்ள இந்தக் கலையின் சிறப்பு மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும்.
விளையாட்டுகளும் சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்தின் வரலாற்றையும் கொண்டாடும் விதமாக 20வது முறையாகத் திரும்பியுள்ள சிங்கப்பூர் மரபுடைமை விழாவில் இவ்வாண்டு 80க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.
பொதுமக்கள் சிங்கப்பூர் மரபையும் பண்பாட்டையும் நினைவுக்கூரும் விதத்தில் மரபுடைமைப் பாதைகள், பயிலரங்குகள், சுற்றுலாக்கள், கண்காட்சிகள் முதலியவற்றோடு புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள கருத்தரங்கிலும் கலந்துகொள்ளலாம்.
விழா நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டவர்களில் ஒருவரான யோகமலர் தியாகராஜன், "பொதுமக்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் நமது நாட்டின் மரபை ஆழமாக அறிந்துகொள்ளலாம். அதோடு சிலம்பம் போன்ற நம் தமிழர் தற்காப்புக் கலையில் அடங்கியுள்ள அம்சங்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் காணும் வாய்ப்பை நாம் நழுவ விடக்கூடாது," என்றார்.
ஈராண்டுகளாக களரி பயிற்சிக் கழகத்தில் சிலம்பக் கலையைக் கற்றுவரும் பிரியதர்ஷினி ராமநாதன், 39, "சாதாரண நாள்களில் நமது கலையைப் பற்றி அறிந்துகொள்ள நேரம் இல்லாமல் போனாலும் இந்த விழா மூலம் பொதுமக்கள் குறிப்பாக நம் தமிழர்கள் தெரிந்துகொள்ள முன்வருவது சிறப்பாக இருக்கும்," என்று கேட்டுக்கொண்டார்.
மே 1 முதல் 28 வரை நடக்கவிருக்கும் சிங்கப்பூர் மரபுடைமை விழா நிகழ்ச்சிகள் குறித்த மேல்விவரங்களுக்கும் முன்பதிவுக்கும் www.sgheritagefest.gov.sg என்ற இணைப்பை நாடலாம்.

