சமைக்கும்போது திடீரென்று ஒரு சந்தேகம். 'உப்பு போட்டேனா? மிளகாய்த்தூள் போட்டேனா?' ஓர் அறைக்கு எதையோ எடுக்கச் சென்று 'நான் இங்கே எதற்கு வந்தேன்?' என்று கூறிக்கொண்டே பின்னோக்கிச் சென்று மறுபடியும் ஞாபகம் வருகிறதா என நீங்கள் முயன்றிருக்கலாம்.
அனைவருக்கும் நேரக்கூடிய தருணங்கள் இவை. முதுமை மட்டுமே இதற்குக் காரணமாகிவிடாது. ஞாபக மறதி எந்த வயதிலும் ஏற்படலாம்.
உடற்பயிற்சி, போதுமான உறக்கம், புகைப்பிடிக்காதிருத்தல், நண்பர்களுடனான தொடர்பு, அதிக மதுபானத்தைத் தவிர்த்தல் போன்ற அடிப்படை பழக்கங்களின் வழி மூளைச் செயல்பாடுகள் குறைவதைத் தடுக்க இயலும். அதோடு 'டிமென்ஷியா' ஏற்படும் அபாயத்தையும் இத்தகைய பழக்கங்கள் கட்டுப்படுத்தும். மாற்றங்கள் நிறைந்த சூழலில் வாழும் நாம், ஆரோக்கியமான மூளைச் செயல்பாடுகளை உறுதிசெய்வதற்கு ஒருசில அம்சங்களில் கவனம் செலுத்தலாம்.
1. கற்றலில் தொடர்ந்து
ஈடுபடுதல்
படித்துக்கொண்டே இருங்கள். முதுமைக் காலத்தில் மூளைச் செயல்பாடுகள் மேம்பட்டு இருப்பதற்கும் கூடுதல் கல்வித் தகுதிக்கும் தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஓய்வுகால வயதையும் தாண்டி முதியவர்கள் பலர் சிங்கப்பூரில் வேலை செய்வதை நாம் பார்க்கிறோம். ஒருவகையில் அந்த வேலை தொடர்ந்து அவர்களின் மூளைக்கு வேலை கொடுத்து ஞாபக மறதி நோய் ஏற்படுவதைத் தள்ளிப் போட உதவுகிறது.
ஓய்வு பெற்றவர்கள் புதிதாக ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடலாம் அல்லது தொண்டூழியம் புரிந்து பிறருக்கு உதவலாம்.
2. புலன் அனைத்துக்கும்
வேலை கொடுத்தல்
இயற்கைச் சூழலில் நாம் கண்களால் ரசிப்பதும் சத்தத்தைக் காது கொடுத்துக் கேட்பதும் பசுமையை முகர்வதுமாக நடந்துசெல்லும்போது பல புலன்கள் அங்குச் செயல்படுகின்றன. அவ்வகையில் கூடுதல் புலன்களைப் பயன்படுத்தி ஒன்றை நாம் உள்வாங்கும்போது ஞாபகத்தில் அதை வைத்துக்கொள்ள மூளையும் கூடுதலாகச் செயல்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதனால் புதியனவற்றை உள்வாங்கும்போதே அனைத்து புலன்களையும் தயார்நிலையில் வைத்திடுங்கள்.
3. உங்கள்மீது நம்பிக்கை
கொள்ளுதல்
'வயதாகிவிட்டது' என்ற புலம்பல் வேண்டாம். முதுமையால்தான் உங்களுக்கு மறதி ஏற்படுகிறது என்று மற்றவர்களின் காதுகளுக்குக் கேட்கும்படி கூறுவதை நிறுத்துங்கள்.
இத்தகைய சிந்தனைதான் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துப் பின்னர் மூளைச் செயல்பாடுகளையும் பாதித்துவிடுகிறது.
4. மூளைப் பயன்பாட்டில்
முன்னுரிமை அளித்தல்
'என் பேத்தியின் பிறந்தநாளா இன்று?' 'என் காரை எந்த மாடியில் நிறுத்தினேன்?' என்றெல்லாம் மூளையைக் கசக்கிப் பிழிவதைத் தவிர்த்துவிட்டு நம்மைச் சுற்றி இருக்கும் அறிவார்ந்த சாதனங்களில் இத்தகைய தகவல்களை ஒருமுறை பதிவுசெய்திடுங்கள்.
நம் வாழ்க்கைக்கும் வளத்துக்கும் முக்கியமாக விளங்கக்கூடிய புதிய பாடங்களை உள்வாங்க மூளையில் இடம் ஒதுக்குங்கள். தவறில்லை.
5. திரும்பச் சொல்லுதல்
புதிய தகவலை நினைவில் பதிய வைப்பதற்கு அதைத் திரும்பச் சொல்லுங்கள். உதாரணமாக, 'ஓ, உங்கள் பெயர் பாலாவா? சரி, பாலா நீங்கள் எத்தனை மணிக்கு இங்கே வந்தீர்கள்?' எனப் புதிதாக உங்களுக்கு அறிமுகமாகும் ஒருவரிடம் ஏதேனும் கேள்வி கேட்டவாறு மீண்டும் அவரின் பெயரைக் குறிப்பிடுங்கள்.
இருப்பினும் ஞாபக மறதி அடிக்கடி நிகழ்வதாக இருந்தால் குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவை நாடுவதில் தவறில்லை. நிபுணர் உதவியைப் பெறுவதும் சிறப்பு.
செய்தி: ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங், ஃபோர்ப்ஸ்

