வெங்காயம் ஒன்றைச் சிறிதுசிறிதாக நறுக்கிக்கொண்டு தண்ணீரில் இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் இட்டு ஊறவைத்தால் மறுநாள் காலை உங்கள் கைகளில் இருப்பது, சமூக ஊடகங்கள் அண்மைய காலமாகப் புகழ்ந்து தள்ளும் அற்புதமான ஒரு மருந்து.
சளிக்காய்ச்சலுக்கும் மூச்சுக்குழாய் பிரச்சினைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்று வெங்காய நீரைப் பற்றி டிக்டாக் தளத்தில் பலரும் பாராட்டு மழை பொழிந்துவருகின்றனர்.
இருப்பினும், உடலின் எதிர்ப்புச்சக்திக்கு உதவும் ஆற்றல் வெங்காய நீருக்கு இருப்பதற்கான சான்றுகள் இல்லை என்றும் சில சுகாதாரப் பிரச்சினைகள்கூட இவ்வகை நீரால் ஏற்படலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சான்றுகள் அடிப்படையிலான மருத்துவப் பரிந்துரைகளைப் பின்பற்றுவதே நல்லது என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
நமது உணவுமுறையில் வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வதால் நன்மைகள் உள்ளன. ஊட்டச்சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் முதலியவை வெங்காயத்தில் அடங்கியுள்ளன.
அது அழற்சி எதிர்ப்பு பண்புகளையுடைய 'குவர்செடின்' எனப்படும் இயற்கையான உயிரியல் விளைவுகளைக் கொண்டது. இந்த அழற்சி எதிர்ப்புத் தன்மை, உடலின் நோய் எதிர்ப்புச்சக்திக்கு உதவலாம். ஆனால் நறுக்கிய வெங்காயத்தை நீரில் இடுவதால் இந்த 'குவெர்செடின்' வெளிப்படாது என்கின்றனர் நிபுணர்கள்.
வெங்காய நீரைக் காட்டிலும் தண்ணீர் சிறந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இனி, சமூக ஊடகங்களில் வலம்வரும் தகவல்களை ஆராய்வதைப் பழக்கமாக்கிக்கொள்வோம்.
செய்தி: இணையம், படம்: பிக்சபே

