தங்கமுனை விருதுப் போட்டியில் புதுப்பிரிவு அறிமுகம்

தங்கமுனை விருதுப் போட்டியில் புதுப்பிரிவு அறிமுகம்

1 mins read

சிறுகதை, கவிதைப் பிரிவுகள் கொண்ட தங்கமுனை விருதுப் போட்டிக்காக இவ்வாண்டு அறிமுகம் காணும் புதுப்பிரிவின் கீழ் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் சமர்ப்பிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி, 1993ல் தேசிய கலைகள் மன்றத்தால் தொடங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக சிறுகதை தொடர்பான இப்புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ், மலாய், சீன மொழிகளில் உள்ள சிறுகதைகளை சிங்கப்பூர் எழுத்தாளர்கள் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பதை ஊக்குவிப்பதற்காக இப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு மொழிகளிலும் முதல் மூன்று நிலைகளில் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதை, கவிதைப் படைப்புகளுக்கு $6,000, $4,000, $2,000 எனத் தரவரிசைப்படி ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும். ஆங்கில மொழிபெயர்ப்பு கண்ட சிறுகதைகளுக்கும் இப்பரிசுத்தொகைகள் வழங்கப்படும்.

அண்மைய ஆண்டுகளாக மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளும் மொழிபெயர்ப்பாளர்களும் இலக்கிய உலகில் கூடுதல் அங்கீகாரம் பெற்றுவருகின்றன. தங்கமுனை விருதுப் போட்டிக்கு எல்லா வயது சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கி ஜூன் 13ஆம் தேதி வரை தங்களின் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.