கருணாநிதி துர்கா
எஸ்11 வெளிநாட்டு ஊழியர்
தங்குவிடுதியின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் 'இஃப்தார்' எனும் நோன்புத் துறப்பு நிகழ்ச்சி பொங்கோலில் அமைந்துள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் அவ்விடுதியில் தங்கியிருக்கும் முஸ்லிம் வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றிணைந்து நோன்புத் துறந்தனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மனிதவள அமைச்சரும் வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங் கலந்துகொண்டார்.
கூடியிருந்த வெளிநாட்டு ஊழியர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டியதோடு அவர்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து வளமான எதிர்காலத்தைக் காண்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் டாக்டர் டான்.
"அனைத்து ஊழியர்களும் தங்களது வேலையிடப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நடப்பார்கள் என நம்புகிறேன். அவர்களின் செழிப்பான வாழ்விற்காகப் பல திட்டங்களை அறிமுகப்படுத்திய சமூக அமைப்புகளுக்கு எனது நன்றியும் பாராட்டுகளும்," என்றார் அமைச்சர் டான்.
கிட்டத்தட்ட 60 முஸ்லிம் வெளிநாட்டு ஊழியர்கள் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நோன்பு இருப்பதன் நிறைவைக் குறிக்கும் வகையிலும் நோன்புப் பெருநாளை உற்சாகத்துடன் வரவேற்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுயில் அனைத்து பண்டிகைகளையும் இவ்வாறு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்தது.
நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை என்றாலும் ஊழியர்களுக்குச் சில அன்பளிப்புகளை வழங்கி வருகிறது விடுதி நிர்வாகம்.
"கொவிட் கட்டுப்பாடுகள் நிறைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இந்த ஆண்டு நோன்பு பெருநாளை எந்த கட்டுப்பாடுகளுமின்றி நண்பர்களுடன் இணைந்து கொண்டாட முடிவதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்," என்று 10 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் திரு மொல்லா மஃபூஜர், 29, கூறினார்.
"பங்களாதேஷில் இருக்கும் எனது குடும்பத்தினரிடமிருந்து தொலைதூரம் சிங்கப்பூருக்கு வந்து நோன்புப் பெருநாளை கொண்டாடுவதில் ஒரு சிறிய வருத்தம் இருந்தாலும் இங்கேயும் என் நண்பர்களுடன் இணைந்து இந்தப் பண்டிகைக் காலத்தை என்னால் உல்லாசமாக கழிக்க முடிகிறது," என்று பங்களாதேஷிலிருந்து வந்திருக்கும் வெளிநாட்டு ஊழியரான திரு அல் அமின், 41, கூறினார்.
"கொவிட் கிருமித்தொற்று காலத்தில் கூட ஊழியர்களுக்காக நாங்கள் இணையம் வழி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தோம். இன்று நேரிலேயே நோன்புப் பெருநாளை அனைவரும் இணைந்து கொண்டாடும் ஏற்பாடுகளை செய்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம்," என்று எஸ்11யின் நிர்வாக இயக்குநர், திரு ஜோனதன் சியே கூறினார்.

