தவறான நட்பு வட்டாரம் வாழ்க்கையை எப்படிக் கொண்டுபோகும், நல்ல வழிகாட்டிகள் இருந்தால் வாழ்க்கை எப்படி மாறும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு 45 வயது திரு. ஜென்கேஸ்வரன் முனியன்.
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ஜென்கேஸ்வரன் தனது 26 வயதில் முன்கோபத்தால் அடிதடியில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றார்.
குற்றத்தை உணர்ந்து தமக்கு பிடித்த சதுரங்க விளையாட்டில் சாதிக்க நினைத்த அவர், 2013ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டில் மலேசியாவுக்கு வெண்கலம் வென்று
தந்தார்.
ஜென்கேஸ்வரனின் வாழ்க்கைக் கதை குண்டர் கும்பலில் இருந்து வெளியேற பல மலேசியர்களை ஊக்குவிக்கும் என்ற நோக்கத்தில் அவரின் கதையை ஆவணப்படமாக எடுத்துள்ளார் 22 வயது பல்கலைக்கழக மாணவர் சனத்குமார் கணேசன்.
'Wanted: Shades of Life' என்ற தலைப்பில் மூன்றாவது பாகமாக ஜென்கேஸ்வரனின் கதையை ஆவணப்படமாக எடுத்துள்ளார் சனத்குமார்.
இந்த 70 நிமிட ஆவணப்படத்தைப் பள்ளி மாணவர்களுக்கும் சமூகத்தில் உள்ள எல்லா வகை மக்களுக்கும் கொண்டு சேர்க்க படக்குழுவினர் தற்போது நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சனத்குமார் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
"நட்பு வட்டாரம் சரியில்லாத காரணத்தால் 16 வயது முதலே சண்டைகளில் ஈடுபட்டேன், அதனால் உயர்நிலைப்பள்ளி கூட முடிக்கவில்லை. சரியான படிப்பு இல்லாததால் சரியான வேலை இல்லை, வேலையிடத்தில் சண்டையிட்டதால் 26 வயதில் சிறைக்குச் சென்றேன்" என்றார் ஜென்கேஸ்வரன்.
"சிறையில் இருந்த இரண்டு வாரங்கள் கொடுமையாக இருந்தது. தூக்கம், உணவு என அனைத்திலும் சிக்கல். சிறையை விட்டு வந்தவுடன் மீண்டும் வேலையில் சேர முடிவெடுத்தேன்"
வேலையிடத்தில் தன்னை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் கிடைத்ததாகவும் அப்போதுதான் தனக்குள் இருந்த சதுரங்க விளையாட்டு மீதான ஆர்வம் மீண்டும் எட்டிப்பார்த்ததாகவும் ஜென்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
10 வயதில் விளையாடிய சதுரங்க விளையாட்டை மீண்டும் 30 வயதில் விளையாடத் தொடங்கியதாக அவர் கூறினார்.
2010ஆம் ஆண்டு இரண்டு பயிற்றுவிப்பாளர்களின் உதவியுடன் பயிற்சியைத் தொடங்கிய ஜென்கேஸ்வரன் மெல்ல மெல்ல போட்டித் தொடர்களில் விளையாடினார்.
இறுதியில் 2013ஆம் ஆண்டு மலேசியாவின் தென்கிழக்கு ஆசிய விளையாட்டு அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றார். தம்மிடம் உள்ள திறமை மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்பதற்காக இப்போது 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு பயிற்சி அளித்து வருகிறார் ஜென்கேஷ்.
அதுமட்டுமில்லாமல், அனைத்துலக அளவில் சதுரங்க விளையாட்டு நடுவரகவும் போட்டி ஏற்பாட்டாளாராகவும் முன்னேற தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
"ஜென்கேஷ்வரனிடம் சதுரங்க விளையாட்டுக் கற்றுக்கொண்டவர்களில் நானும் ஒருவன், எனக்கு அவர் முன்மாதிரியாக இருக்கிறார்.எனக்கு ஆவணப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம். எளிய மக்களின் சாதனைகளைச் சமூகத்திற்கு கொண்டு செல்வது எனது இலக்கு" என்றார் சனத்குமார்.
கனடாவில் திரைப்படங்கள் எடுப்பது குறித்து படித்து வரும் சனத்குமார், இந்த ஆவணப்படம் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களிலும் சில விருதுகளை வென்றுள்ளதாகக் கூறினார். மலேசியாவில் இந்த ஆவணப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் விரைவில் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளதாகவும் சனத்குமார் தெரிவித்தார்.

