அனுஷா செல்வமணி
'பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்' அல்லது 'பிசிஓஎஸ்' எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினை பெண்களை எந்த வயதிலும் பாதிக்கக்கூடும்.
குறிப்பாக கருத்தரிக்கும் வயதில் இருக்கும் பெண்களில் 10 முதல் 15 விழுக்காட்டினர் இதனால் பாதிப்படைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில், பெண்கள் சினைப்பை நீர்க்கட்டிகளால் எவ்வாறு பாதிப்படைகின்றனர், இதன் தொடர்பில் அவர்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் போன்றவை தொடர்பில் விளக்கமளித்தார் டாக்டர் வனஜா கலைச்செல்வன்.
இவர், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் மகப்பேறு, மாதர்நல மருத்துவத் துறையில் தாய்-சேய் நல மருத்துவப் பிரிவில் மூத்த ஆலோசகராகப் பணிபுரிகிறார்.
"பெண்களின் உடலில் 'அன்ட்ரொஜென்' எனும் சுரப்பி நீர் (ஹார்மோன்) அளவுக்கு அதிகமாக சுரப்பதால் சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன. இதனால் கருமுட்டைகள் சரியான இடைவெளியில் வெளியாவது பாதிக்கப்படுகிறது.
"வழக்கமாக பெண்களின் உடலில் ஆண் பாலியல் சுரப்பி நீரான 'அன்ட்ரொஜென்' சிறிய அளவிலேயே சுரக்கும். ஆனால் ஒரு பெண்ணின் உடலில் அது அளவுக்கு அதிகமாகும்போது அவருக்கு வயிறு, மார்பகப் பகுதிகளில் அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி ஏற்படக்கூடும். உடல் பருமன், எண்ணெய்ப் பசை மிகுந்த தோல் போன்றவற்றுடன் ஆக மோசமாக கருத்தரியாமை பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது," என்று டாக்டர் வனஜா கூறினார்.
பெண்களுக்கு எதனால் இத்தகைய சிக்கல் ஏற்படுகிறது என்று இன்னும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை.
"இதற்கு நிரந்தரத் தீர்வு இல்லாவிட்டாலும் இதன் அறிகுறிகளையும் விளைவுகளையும் குறைக்க பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. தக்க நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொண்டால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும்," என்று டாக்டர் வனஜா குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினை உள்ள பெரும்பாலான பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு ஆற்றல் இருக்கும். உடல் இன்சுலினை சரியான முறையில் பயன்படுத்த முடியாத காரணத்தால் இன்சுலினின் அளவு அதிகமாகிவிடும். இத்தகைய நிலை 'அன்ட்ரொஜென்' அளவை அதிகரிக்கத் தூண்டுதலாக இருக்கும். மேலும், அவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பும் அதிகம் என்றார் அவர்.
தாய் அல்லது சகோதரிக்கு சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு இருந்தால் அந்தப் பெண்ணுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக உடல் பருமனாகும்.
ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியாமல் விட்டால் கருப்பைப் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தும் உள்ளது.
ஒரு பெண் பருவமடைந்து பல ஆண்டுகள் ஆரோக்கியமாக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு திடீரென அவரின் சினைப்பையில் கட்டிகள் ஏற்படக்கூடும். எனவே இந்தச் சிக்கல் நமக்கு நேராது என்று அலட்சியமாக இராமல் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பேணிக்காக்க வேண்டும் என்று டாக்டர் வனஜா அறிவுறுத்தினார்.
மாவுச்சத்தும் கொழுப்புச் சத்தும் குறைவாக உள்ள உணவை உட்கொள்வது, ஒரு நாளில் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது போன்ற ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றி வந்தால் 'பிசிஓஎஸ்' பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைய முடியாமல் போனாலும் அதன் விளைவுகளைக் குறைக்கலாம்.
இருபது வயது நிரம்பாத பெண்களுக்கு மாதவிடாய் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வராமல் இருந்தால் ஒரு வேளை அது சினைப்பை நீர்க்கட்டிக்கான அறிகுறி என அஞ்சத் தேவையில்லை என்ற டாக்டர் வனஜா, அநேகமாக அந்தப் பெண்ணின் சினைப்பைகள் முதிராமல் இருப்பதால்கூட அவ்வாறு நேரலாம் என்றார்.
சிங்கப்பூரில் 'பிசிஓஎஸ்' குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதால் உடனடிப் பரிசோதனையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என டாக்டர் வனஜா நம்பிக்கை அளித்தார்.
இல்லத்தரசியான 42 வயது ரேணுகா கடந்த 17 ஆண்டுகளாக இந்தப் பிரச்சினையால் அவதியுற்று வருவதாகக் கூறினார். இப்பிரச்சினை குறித்துத் தெரியவந்தபோது முதலில் கவலை அடைந்த அவர், இதை வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ள வேண்டுமே என வருந்தியதாகக் குறிப்பிட்டார்.
அவரது தாயாருக்கும் இந்தச் சிக்கல் இருந்தது என்று கூறும் ரேணுகாவிற்கு ஒரு மகள் இருக்கிறார். அடுத்த குழந்தையைத் கருத்தரிக்க சிரமப்படுவதோடு அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி, உடற்பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தன்னம்பிக்கை இழந்த அவருக்கு மனநிம்மதி பறிபோனது. அன்றாடம் தன் நிலையை எண்ணி வருந்தும் ரேணுகா, மருத்துவர் தந்த மாத்திரைகளை முறையாக உட்கொண்டு வருவதாகக் கூறினார்.
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்காவிட்டால் மறுபடியும் மோசமடையும் என்றார் அவர்.
இருபதுகளில் இருக்கும் பெண் ஒருவர், சினைப்பை நீர்க்கட்டிகளால் எதிர்நோக்கும் சவால்களையும் மனக்கவலையையும் பகிர்ந்துகொண்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான பரிசோதனையை மேற்கொண்டபோது 'பிசிஓஎஸ்' இருப்பது உறுதியானது. இதற்கு சிகிச்சை உள்ளது என்பதே மனநிறைவு தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பருவமடைந்தபின் மாதவிடாய் ஒழுங்கற்று இருந்ததாகவும் சில முறை கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாது என்றும் அவர் கூறினார். ஒருமுறை தொடர்ச்சியாக ஏழு மாதங்களுக்கு மாதவிடாய் நீடித்ததாகவும் கூறினார்.
வாழ்க்கையில் பிடிமானம் இல்லாமல் நம்பிக்கையை இழந்த இவர் மாதவிடாயின்போது பொது இடங்களில் அவமானப்பட நேரிடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்வதாகக் கூறினார்.
குடும்பத்தில் யாருக்கும் இந்தச் சிக்கல் இல்லாதபோதும் தனக்கு ஏற்பட்டதை நினைத்து வருந்தும் இவர், முடி கொட்டுதல், உடற்பருமன், முகப்பருக்கள் போன்றவற்றால் அவதியுறுகிறார்.

