உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய கலைகள் மன்றம் வழங்கும் தங்கமுனை விருதுகளில் இவ்வாண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளுக்குப் புதிய பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிடெட்', சிங்கப்பூர் புத்தக மன்றத்துடன் இணைந்து இந்த ஆண்டு தங்கமுனை (கோல்டன் பாயின்ட்) விருதுப் போட்டியை நடத்துகிறது.
அதனையடுத்து தங்கமுனை விருதுப் போட்டி தொடர்பில் இரு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளுக்கான விருதும் வெற்றிபெற்றோர்க்கு மதியுரை வழங்கும் திட்டமும் அவ்விரண்டு அம்சங்கள்.
தேசிய கலைகள் மன்றம் 1993ஆம் ஆண்டு முதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தங்கமுனை விருதுகளை வழங்கி வருகிறது.
2001ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை. 2001ல் கவிதைக்கான பிரிவு அறிமுகம் கண்டது.
16வது முறையாக நடைபெறும் இந்த எழுத்துப் போட்டிக்கான விண்ணப்பங்களை நாளை முதல் ஜூன் மாதம் 13ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.
ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் என சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகள் நான்கிலும் சிறுகதைகளையும் கவிதைகளையும் அனுப்பிவைக்கலாம்.
கூடுதலாக, இந்த ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளையும் போட்டிக்கு அனுப்பிவைக்கலாம்.
உள்ளூர் எழுத்தாளர்கள் மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதிய சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை ஊக்குவிப்பது தங்கமுனை விருதுப் போட்டிக்கான புதிய பிரிவின் நோக்கம்.
இந்த மொழிகளில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகள் புதிய வாசகர்களைச் சென்றடைய அது வகைசெய்யும்.
கலாசாரங்களுக்கு இடையிலான மேம்பட்ட புரிதலுக்கு வழிவகுப்பதுடன் மொழிபெயர்ப்புத் துறையையும் மொழிபெயர்ப்பாளர்களையும் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர அது உதவும்.
தங்கமுனை விருது தொடர்ந்து புதிய எழுத்தாளர்களை அடையாளம்காணும் தளமாக விளங்கும் என்று 'ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமிடெட்' கூறியது.
உள்ளூர் எழுத்தாளர் சமூகத்தைப் பேணிக் காக்கவும் சிங்கப்பூரில் இலக்கிய வெளிப்பாட்டிற்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும் உதவும் தளமாக இவ்விருதுகள் விளங்கும் என்று அது குறிப்பிட்டது.
மற்றொரு புதிய அம்சமான மதியுரை வழங்கும் திட்டம், வெற்றிபெற்றோர் தங்கள் எழுத்துத் திறனுக்கு மெருகூட்டிக்கொள்ள வாய்ப்பளிக்கும்.
சிங்கப்பூரில் முத்திரை பதித்த மூத்த எழுத்தாளர்கள் வெற்றிபெற்ற படைப்புகளை மெருகூட்ட வும் பின்னர் அவற்றை கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்புத் தொகுப்புகளாகக் கொண்டுவரவும் வழிகாட்டுவர்.
இவ்வாண்டின் தங்கமுனை விருது வெற்றியாளருக்கு $6,000 ரொக்கப் பரிசுடன் சான்றிதழ், வெற்றிக் கிண்ணம், மதியுரைஞரின் வழிகாட்டல் ஆகியவை காத்திருக்கின்றன.
இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு $4,000 ரொக்கம், சான்றிதழ், மதியுரைஞரின் வழிகாட்டல் ஆகியவை கிட்டும்.
மூன்றாவதாகத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு $2,000 ரொக்கத்துடன் சான்றிதழும் மதியுரைஞரின் வழிகாட்டுதலும் கிடைக்கும்.
நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் கவிதை, சிறுகதை, ஆங்கில மொழிபெயர்ப்புச் சிறுகதை என மூன்று பிரிவுகளில் இவ்வாறு பரிசுகள் வழங்கப்படும்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அனைவரும் போட்டியில் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு ஏதுமில்லை. படைப்புகள் எந்தக் கருவிலும் அமைந்திருக்கலாம்.
படைப்புகள் இணையம் வழியாக, ஜூன் மாதம் 13ஆம் தேதி மாலை ஆறு மணிக்குள் சென்றுசேர வேண்டும். விண்ணப்பத்திற்கான கட்டணம் $16.
விண்ணப்பத்துடன் 100 சொற்களில் தன்குறிப்பை ஆங்கிலத்தில் எழுதி இணைக்க வேண்டும். படைப்பு குறித்து 50 சொற்களில் விவரிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்புவது குறித்த மேல்விவரங்களுக்கு 'https://artshouselimited.sg/gpa' எனும் இணையத்தளத்தை நாடலாம்.

