'பல் போனால் சொல் போச்சு' எனும் பழமொழி நாம் அறிந்ததே. ஒருவரின் முகத் தோற்றத்திலும் பற்களின் பங்கு முக்கியமானது.
பற்கள் சரியான உச்சரிப்புடன் பேசுவதற்கும் அழகாகக் காட்சியளிப்பதற்கும் மட்டுமன்றி மனிதர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும் என்பது கண்கூடு. இது ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் சமூகத்தில் பிறருடன் கலந்துபழகும்போது தன்னம்பிக்கையைக் குலைக்கவும் வல்லது.
பற்களையும் ஈறுகளையும் சரியாகப் பராமரிக்காமல் அலட்சியமாக இருந்தால் அது, இதய நோய்கள், நீரிழிவு, நுரையீரல் தொற்று, செரிமானப் பிரச்சினைகள் எனப் பல்வேறு ஆரோக்கியச் சிக்கல்களுக்கு வித்திடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உலகச் சுகாதார நிறுவனம் சென்ற ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், உலகம் முழுவதும் 3.5 பில்லியன் பேர் பற்களையும் ஈறுகளையும் சரியாகப் பராமரிக்காமல் நோய்வாய்ப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
குறிப்பாக கர்ப்பிணிகள் தங்கள் பற்களையும் ஈறுகளையும் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்.
அவ்வாறு செய்யாவிட்டால் கர்ப்பிணிக்கு பற்சிதைவு ஏற்படக்கூடும் என்பது மட்டுமன்றி, குறைப்பிரசவம், சிசுவின் எடை குறைதல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களால் அவதியுற நேரிடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒவ்வொருவரும் அன்றாடம் பற்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
செய்யக்கூடியவை
தினசரி பற்களை இருமுறை துலக்கவேண்டும். காலை எழுந்தவுடனும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னும் தரமான பற்பசையைப் பயன்படுத்தித் துலக்குதல் நல்லது.
பல் துலக்கும்போது நாக்கையும் மறக்காமல் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒவ்வொருமுறை உணவு உட்கொண்ட பிறகும் வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
சீரான இடைவெளியில் பல் மருத்துவரிடம் பற்களைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
உணவில் கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுப் பொருள்களைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
அதிக சர்க்கரை சேர்த்த இனிப்புப் பண்டங்களை அதிகம் உண்ணக்கூடாது.
புகையிலை பயன்படுத்துதல், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.
பல் துலக்கும்போது நீண்ட நேரம் பற்களை மிகவும் அழுத்தித் தேய்க்கக்கூடாது.
கடினமான பொருள்களைப் பற்களால் கடிக்கக்கூடாது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

