ஆ. விஷ்ணு வர்தினி
காலில் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்த நாள்களில் சொல்லொணா வலியால் வேதனைப்பட்டார் மாணவர் சக்ஷம். அப்போதுதான் அவருக்குப் பொழுதைப் போக்கும் வகையில் அறிமுகமானது பின்னல் கலை.
மருத்துவமனையில் கட்டிலில் இருந்து எழுந்து அமர்வதற்குக் கூட சிரமப்பட்ட சக்ஷம், நூற்கண்டைக் கொண்டு பின்னல் வேலையில் ஈடுபட்டதில் மகிழ்ச்சி கண்டார்; வலியை மறந்தார். இரண்டு வாரங்களுக்கு மேல் எழுந்து நடமாட முடியாத நிலையில் நூலிழைகள் தம்மை அமைதிப்படுத்தி ஆறுதல் அளித்ததை அவர் உணர்ந்தார்.
இக்கலையை சக்ஷமுக்கு அறிமுகப்படுத்திய திருவாட்டி பிரியா ஆஸ்தானா, 40, அத்தருணத்தில் பின்னல் கலையின் வல்லமையைக் கண்டுகொண்டார்.
தோழி திருவாட்டி ஆர்னிகா பம்பாவின் மகனான சக்ஷமுக்கு அடிப்படைப் பின்னல் முறைகளையும் உத்திகளையும் கற்றுத்தந்ததன் பின்னர், அவரின் மனநிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் திருவாட்டி பிரியாவிற்கு வியப்பூட்டியது.
அதனைத் தொடர்ந்து, இளையர் தொடங்கி, தற்போது சிறைவாசிகள், மூத்தோர் எனப் பலரும் நூற்பின்னல் கலையால் பயனடையும் வண்ணம் 2019ஆம் ஆண்டில் 'வீவிங் ஹேப்பினஸ்' எனும் சமூக நிறுவனத்தை தம் நண்பருடன் இணைந்து திருவாட்டி பிரியா தொடங்கினார்.
சிறுவயதில் பொழுதுபோக்காகத் தம் தாயாரிடமிருந்து திருவாட்டி பிரியா இந்தக் கைவினைக் கலையைக் கற்றுக்கொண்டபோதும் கடந்த முப்பது ஆண்டுகளாக அது அவரிடம் ஒட்டிக்கொண்டுள்ளது.
"பின்னல் கலையை மூத்தோரின் பொழுதுபோக்காகவே நான் முதலில் கருதினேன். ஆனால், இப்போது முற்றிலும் அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டேன். என் நண்பர்களுக்கும் இதனை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்," என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 22 வயது சக்ஷம்.
திருவாட்டி பிரியாவும் திருவாட்டி ஆர்னிகாவும் முதலில் கைப்பேசியைத் தட்டுவதற்கு மாற்றாக நூற்பின்னல் கலையை அறிமுகப்படுத்தப் புறப்பட்டனர்.
காலையில் கண்விழிப்பதில் இருந்து இரவு மீண்டும் உறங்கச் செல்லும்வரை தங்கள் பிள்ளைகள் கைப்பேசியும் கையுமாக இருந்தது திருவாட்டி பிரியாவிற்கும் திருவாட்டி ஆர்னிகாவிற்கும் பெருங்கவலையாக இருந்தது.
இதனையடுத்து, கைப்பேசித் திரையில் செலவிடும் நேரத்தைக் குறைக்கும் முயற்சியாக, அதற்கு மாற்றாக நூற்பின்னல் கலையை அவர்கள் அறிமுகப்படுத்த விரும்பினர்.
"கைப்பேசி தட்டுவது நேரத்தைப் போக்கவும், நம் சிந்தனையைச் சிறிது நேரம் திசைதிருப்பவும்தான். அதே நேரத்தை மிக எளிமையான பின்னல் வேலையில் நாம் முதலீடு செய்யும்பொழுது, கடைசியில் நம் கைக்குக் கிட்டும் துணிப்பொருள் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடாக அமைகிறது," என்றார் 49 வயதான திருவாட்டி ஆர்னிகா.
வியாழக்கிழமைதோறும் ஒன்றுகூடி நூல் பின்னும் நடவடிக்கையை 'வீவிங் ஹேப்பினஸ்' குழு தொடர்கின்றது. கொவிட்-19 காலத்திலும் அது தொடர்ந்தது.
இந்நடவடிக்கை கிட்டத்தட்ட ஆயிரம் பேரைச் சென்றடைந்துள்ளதாகத் தோழிகள் தெரிவித்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தொப்பிகள், மீட்கப்பட்ட வீட்டு விலங்குகளுக்குத் துணிப்பாய்கள் முதலியவற்றை இவர்கள் வழங்குகின்றனர்.
தம்முடைய பதின்ம வயது மகளின் மூலம் 'வீவிங் ஹேப்பினஸ்' அமைப்பு பற்றி தெரிய வந்ததையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக அவ்வமைப்பில் தொண்டூழியம் புரிந்து வருகிறார் இல்லத்தரசியான திருவாட்டி எம். விபா.
"என் மகளின் உயர்நிலைப் பள்ளிக்கு பிரியா, ஆர்னிகா இருவரும் வந்திருந்து பயிலரங்கு நடத்தினர். அவர்களின் முயற்சி நெகிழ வைத்தது. ஓய்வு நேரத்தில் மனத்திற்கு நெருக்கமான ஒரு திறனைக் கொண்டு பல்வேறு பயனாளிகளுக்கு உதவுவது மனநிறைவு அளிக்கிறது," என்றார் திருவாட்டி விபா.
நூற்பின்னல் கலையுடன் தொடர்ந்து இணைந்திருப்பது, 68 வயது தொண்டூழியர் மாலா துரையின் கைகளுக்கும் மனத்திற்கும் மூளைக்கும் வேலை கொடுத்து அவரைத் துடிப்புடன் வைத்துள்ளது; ஒத்த விருப்பங்கள் கொண்ட பெண்மணிகளுடன் உரையாடும் வாய்ப்பையும் அளித்துள்ளது.

