முழுச்சத்தும் கிடைக்க பருப்புவகைகளை எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும்? வல்லுநர் விளக்கம்

முழுச்சத்தும் கிடைக்க பருப்புவகைகளை எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும்? வல்லுநர் விளக்கம்

2 mins read
7c349fa9-6a4f-4e50-9e27-37b4f3accd69
-

பருப்பு, பயறு வகை­க­ளைச் சரி­யான கால அள­விற்கு ஊறவைப்­ப­தன் மூலம் அவற்­றி­லுள்ள ஊட்­டச்­சத்­து­களின் அளவை அதிகப்படுத்தலாம்; செரி­மா­னத்திற­னை­யும் மேம்­ப­டுத்­த­லாம்.

பருப்பு வகை­கள் புர­தச்­சத்­து­மிக்க உண­வுப்­பொ­ரு­ளாக விளங்­கு­கின்­றன. சமைப்­ப­தற்­கு­முன் அவற்றை நீரில் ஊற­வைப்­ப­தன் மூலம் அவற்­றின்­மூலம் கிடைக்­கும் பய­னைப் பல­ மடங்கு பெருக்­க­லாம்.

உட­லின் ஊட்­டச்­சத்து உட்­க­வர்­திறன் மேம்­ப­டு­கிறது; ஊட்­டச்­சத்து அல்­லாத ஃபைட்டிக் அமி­லத்தை நீக்­க­வும் கால்­சி­யம், இரும்பு, துத்­த­நா­கம் (ஸிங்க்) போன்ற சத்­து­களைப் பிணைக்­க­வும் உத­வு­கிறது.

பருப்பு வகை­க­ளைச் சரி­யான கால அள­விற்கு ஊறவைப்­ப­தன் மூலம் உடல் அவற்றை எளி­தில் செரித்­துக்­கொள்­கிறது; சமைப்­ப­தற்­கான நேர­மும் அதற்­குச் செல­வா­கும் எரி­பொரு­ளின் அள­வும் குறை­கிறது; சுவை கூடு­கிறது.

எல்­லாப் பருப்பு வகை­க­ளை­யும் பயறு வகை­க­ளை­யும் ஒரே கால அள­விற்கு ஊறவைக்­கக்­ கூ­டாது. முழுப் பய­னும் கிடைக்க சில­வற்றை 8-10 மணி நேரம் ஊற வைக்க வேண்­டி­யி­ருக்­கும்; சில­வற்றை 4-5 மணி நேரம் ஊற வைத்­தாலே போது­மானது.

தேவை­யான ஊட்­டச்­சத்­து­கள் நிறைந்த பருப்பு வகை­களை நாளும் உண­வில் சேர்த்­துக்­கொள்­வது நல்­லது. புர­தச்­சத்­தும் நார்ச்­சத்­தும் நிறைந்­துள்­ள­தோடு, உயிர்ச்­சத்­து­கள், இரும்பு, துத்­த­நா­கம், ஃபோலேட், மெக்­னீ­சி­யம் போன்ற கனி­மச் சத்­து­களும் பருப்பு வகை­களில் உள்­ளன.

பருப்பு வகை­களை அன்­றா­டம் உண­வில் சேர்த்­துக்­கொள்­வ­தன் மூலம் நாட்­பட்ட நோய்­கள் நம்மை அணு­கா­மல் தடுக்­க­லாம். அவை இதய நலத்தை மேம்­ப­டுத்­தும்; கெட்ட கொழுப்­பைக் குறைத்து, ரத்த அழுத்­தத்­தைக் குறைக்க உத­வும்.

நீரி­ழி­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ளோர் பருப்­பைச் சேர்த்­துக்­கொள்­வ­தன் மூலம் ரத்­தத்­தில் சர்க்­கரை அள­வைக் கட்­டுக்­குள் வைத்­துக்­கொள்­ள­லாம்.

பருப்பு வகை­க­ளால் கிடைக்­கும் இத்­த­கைய பல நன்­மை­க­ளைப் பெற, அவற்­றைச் சரி­யான கால அள­விற்கு ஊறவைப்­பது அவ­சி­யம். எந்­தப் பருப்பை எவ்­வ­ளவு நேரத்­திற்கு ஊற வைக்க வேண்­டும் என்­பது பற்றி தமது அண்­மைய 'இன்ஸ்­ட­கி­ராம்' பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார் இந்­தி­யா­வைச் சேர்ந்த ஊட்­டச்­சத்து வல்­லு­நரான ஜூகி கபூர்.

"பருப்பு வகை­களை ஊறவைப்­ப­தன் மூலம் அவற்­றைச் சமைப்­ப­தற்­கான நேரம் குறை­யும். இத­னால் ஊட்­டச்­சத்து இழப்­பும் தவிர்க்கப்படும். பயறு, பருப்பு வகை­களை ஊற வைப்­ப­தால் செரி­மா­னம் எளி­தில் நடை­பெறும்; வயிற்­றுப் பொரு­மல் போன்ற பிரச்­சி­னை­கள் எழாது. ஊட்­டச்­சத்து அளவு மேம்­படும். அதே நேரத்­தில், ஊட்­டச்­சத்து அல்­லாத பொருள்­களால் ஏற்­படும் தாக்­க­மும் குறை­யும்," என்­கி­றார் திரு­வாட்டி ஜூகி.

உடைந்த பருப்பு வகை­கள்

பாசிப் பருப்பு, கட­லைப் பருப்பு, உளுந்­தம் பருப்பு, துவ­ரம் பருப்பு போன்ற உடைந்த பருப்பு வகை­க­ளைச் சமைப்­பது எளிது என்­ப­தால் 4-6 மணி நேரம் ஊறவைத்­தால் போது­மா­னது.

முழுப் பயறு வகை­கள்

பாசிப் பயறு, கொள்ளு, தட்­டைப்­ப­யறு போன்ற முழுப் பய­று­களை முளை கட்­டச் செய்­தும் பயன்­ப­டுத்­த­லாம். இவற்றை 6-8 மணி நேரம் ஊறவைக்க வேண்­டும்.

அவரை, கொண்­டைக்­க­டலை

சோயா அவரை, சிவப்­புத் தட்­டைப்­பயறு, கொண்­டைக்­க­டலை போன்றவை அள­வில் சற்­றுப் பெரி­ய­தாக இருப்­ப­தால் அவற்றை 8-10 மணி நேரம் ஊற வைப்­பது சரி­யாக இருக்­கும்.