உடற்பயிற்சியால் உடல்நலமும் மனநலமும் மேம்படும் என்பது பலகாலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மூளையின் நலம் மேம்படவும் உடற்பயிற்சி நேரடிப் பங்காற்றலாம் என்று அமெரிக்காவின் பெக்மன் நவீன அறிவியல், தொழில்நுட்பக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
உடற்பயிற்சியின்போது தசைகளிலிருந்து வெளிப்படும் வேதிச் சமிக்ஞைகள் எப்படி மூளையிலுள்ள நரம்பணுக்களின் வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்பது பற்றி அவர்கள் ஆராய்ந்தனர். குறிப்பாக, உடற்பயிற்சியால் மூளையின் 'ஹிப்போகேம்பஸ்' பகுதி எவ்வாறு பயனடைகிறது என்பதில் அவர்கள் கவனம் செலுத்தினர்.
கற்றல், நினைவாற்றலுக்கும் 'ஹிப்போ கேம்பசுக்கும்' நெருங்கிய தொடர்புள்ளது.
இந்த ஆய்வுக் கட்டுரை 'நியூரோசயின்ஸ்' சஞ்சிகையில் வெளியாகி இருக்கிறது.
தசையணுக்கள் சுருங்கும்போது வெளிப்படும் வேதிச் சமிக்ஞைகளால் மூளை நரம்பணுக்கள் அதிக அளவிலும் அடிக்கடியும் மின்சமிக்ஞைகளை உருவாக்குவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். திடமான வளர்ச்சிக்கும் உடல்நலத்திற்கும் இது ஓர் அடையாளமாகக் கருதப்படுகிறது.

