காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பதற்குப் பதிலாக மோசமான மனநிலையில் எழுந்தது உண்டா? அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
"பல்வேறு காரணங்களுக்காக சிலர் தொடர்ந்து மோசமான நிலையில் உறக்கத்திலிருந்து கண்விழிக்கலாம். இரவில் நன்றாக தூங்காதது, மனச்சோர்வு அல்லது மனவுளைச்சல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணாதது போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
"வாழ்க்கைமுறையும் இதற்கு பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்காதது, எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதது, அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவற்றாலும் நீங்கள் காலையில் கண்விழிக்கும்போது உங்கள் மனநிலை சரியில்லாமல் போகலாம்," என்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள பிரைமஸ் சூப்பர் ஸ்பெஷேலிட்டி மருத்துவமனையின் மூத்தோர் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் விஜய் குமார் குர்ஜார் தெரிவிக்கிறார்.
பொதுநலனை மேம்படுத்த வேண்டுமாயின், ஒருவரிடம் இருக்கக்கூடிய பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்குத் தீர்வுகாண்பது முக்கியம் என்கிறார் அவர்.
குறிப்பிட்ட சில தூக்கப் பிரச்சினைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
"இரவில் உறங்குவதற்குச் சிரமப்படுவது, இரவில் பலமுறை உறக்கத்திலிருந்து எழுந்திருப்பது, குறட்டை விடுவது, தூக்கத்தில் சாதாரணமாக மூச்சுவிட சிரமப்படுவது போன்றவை நல்ல தூக்கத்திற்கு இடையூறாக விளங்கலாம்," என்று டாக்டர் விஜய் குமார் குறிப்பிட்டார்.
குறித்த நேரத்தில் தூங்கி எழுந்திருப்பது, தூங்குவதற்கு உகந்த சூழலை அமைத்துக்கொள்வது, யோகா போன்ற தியான உத்திகளைச் செயல்படுத்துவது, படுக்கைக்குச் செல்வதற்கு முன் கைப்பேசியிலோ தொலைக்காட்சியிலோ செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்வது, பகல் நேரத்தில் உறக்கத்தைத் தவிர்த்துக்கொள்வது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றினால் கூடுமானவரை இரவில் நல்ல தூக்கம் கிடைத்து காலையில் புத்துணர்வுடன் எழுந்திருக்கலாம் என்கிறார் குருகிராமில் உள்ள நாராயணா சூப்பர் ஸ்பெஷேலிட்டி மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர் ராகுல் ராய் கக்கார்.

