ரச்சனா வேலாயுதம்
பெண்களுக்கான சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து, ஆண்கள் அதிகமாக இருக்கும் வணிகத் துறையில் தடம்பதிக்கும் குறிக்கோளுடன் 'சுவிஃப்ட் அக்கவுன்டிங் பிஐ' என்ற நிறுவனத்தை இவ்வாண்டுத் தொடக்கத்தில் தொடங்கினார் கனகேஸ்வரி மோஹன தாஸ், 36 (படம்).
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தின் வரவுசெலவுகளைச் சமாளிப்பதுடன் நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட லாபத்தை எளிதாகப் புரிந்துகொள்ளவும் இவரின் நிறுவனம் வரைகலை மூலம் உதவி வருகிறது.
கப்பல் தொடர்பான நிறுவனத்தில் முழு நேரக் கணக்காய்வாளராகப் பணிபுரியும் குமாரி கனகேஸ்வரி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக கணக்கியல் பாட நூல் ஒன்றை எழுதி சென்ற ஆண்டு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகளையும் இவர் நடத்தி வருகிறார்.
இந்த வேலைகளின்மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு 'சுவிஃப்ட் அக்கவுன்டிங் பிஐ' நிறுவனத்தில் இவர் முதலீடு செய்துள்ளார்.
தற்போது குமாரி கனகேஸ்வரி உட்பட மூவர் பணியாற்றும் இந்த நிறுவனம் பத்து நிறுவனங்களுக்குக் கணக்கியல் சேவைகளை வழங்கி வருகிறது.
திருமணம், குழந்தைகள் என்று பெண்கள் முடங்கிவிடாமல், நிதி தொடர்பான அறிவை வளர்த்துக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் இவர்.
"ஒற்றைப் பெற்றோரை என் நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிய ஊக்குவிக்கும் நோக்கில், அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நீக்குப்போக்கையும் வழங்குகிறோம். என்னுடன் பணிபுரியும் ஒற்றைத் தாய்மார்கள் வணிகத் துறையில் சேர்ந்து திறன்களை மேம்படுத்திக்கொள்ள இந்த ஏற்பாடு உதவுகிறது," என்றார் குமாரி கனகேஸ்வரி.
'சுவிஃப்ட் அக்கவுன்டிங்' நிறுவனத்தின் சேவைகளைச் சில மாதங்களாகப் பயன்படுத்தி பயனடைந்தவற்றில் 'இஃபிரான்டியர்ஸ் சொலுஷன்ஸ்' என்ற தொழில்நுட்ப நிறுவனமும் ஒன்று. ஒரு தொழில்நுட்ப நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முக்கியத்துவத்தைப் பகிர்ந்துகொண்டார் அந்நிறுவனத்தின் மேலாளர் குமாரி ஆனா ராஜ்.
"எளிமையாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எங்களின் வரவுசெலவுத் திட்டங்களை ஒழுங்குபடுத்த 'சுவிஃப்ட் அக்கவுன்டிங்' உதவியுள்ளது. எங்களின் வளர்ச்சியை உடனுக்குடன் கண்டு அதற்கேற்ப எங்களின் திட்டங்களை மாற்றிக்கொள்ள இவர்களின் மென்பொருள் உதவியுள்ளது," என்றார் குமாரி ஆனா.
கணக்காய்வாளர்களைப் பணியமர்த்த சிரமப்படும் சிறு வணிகர்களுக்கு 'சுவிஃப்ட் அக்கவுன்டிங்' நிறுவனம் கணக்காய்வு முறையைக் கற்றுத் தருகிறது.
"நிதிக் கல்வியறிவின் முக்கியத்துவத்தை அறிந்து, அதை எளிமைப்படுத்தி என் நிறுவனம் மூலம் மக்களுக்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன்," என்றார் குமாரி கனகேஸ்வரி.
அவ்விருப்பத்தை நனவாக்க, கணக்காய்வுச் செயலி ஒன்றை இந்த ஆண்டு வெளியிட முயன்று வரும் இவர், வணிகங்கள், குடும்பங்கள் என எல்லோரின் வரவுசெலவுக் கண்காணிப்புப் பயன்பாட்டுக்கு அது உதவும் என்றும் குறிப்பிட்டார்.
வாழ்க்கையில் பல பொறுப்பு
களைச் சுமந்துவரும் இவருக்குப் பக்கபலமாகவும் முன்மாதிரியாகவும் தம் தாயார் உள்ளார்
என்பதைப் பகிர்ந்துகொண்டார்.
"ஆறாம் வகுப்பு மட்டும் படித்த என் தாயார், நான் உயர்கல்வி பயில வேண்டும் என விரும்பினார். குறிப்பாக, இந்தத் துறையில் நான் சாதிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை," என்றார் குமாரி கனகேஸ்வரி.
ஆஸ்திரேலியாவில் மர்டோக் பல்கலைக்கழகத்தில் வணிகத் துறை தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ள இவர், தொடர்ந்து தம்மை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் தொழில்முறைக் கணக்கியல் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். இந்த ஆண்டு கணினி அறிவியல் தொடர்பான பட்டப்
படிப்பையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.
பெண்களுக்கு, குறிப்பாக ஒற்றைத் தாயார்களுக்கு வணிகத் துறையில் புதிய வாய்ப்புகளையும் திறன்மேம்பாடுகளையும் அளிக்க ஓர் அமைப்பைத் தொடங்கவும் இவர் திட்டமிட்டுள்ளார்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணக்கியல் பாடநூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார் குமாரி கனகேஸ்வரி மோஹன தாஸ், 36. படம்: கனகேஸ்வரி