பலர் காலையில் எழுந்ததும் ஒரு குவளை காபி, அல்லது தேநீருடன் ஒரு நாளை தொடங்குகிறோம். ஆனால் அவ்வாறு தொடங்குவது ஆரோக்கியத்திற்கு எதிர்மறையாக அமையும் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
நமது ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து என்று வரும்போது, சர்க்கரையை வில்லனாக மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். எனவே, கிடைக்கும் பல வகையான இனிப்புகளைக் கருத்தில் கொண்டு வெள்ளைச் சர்க்கரை, வெல்லம், தேன் மற்றும் நாட்டுச்சர்க்கரை, ஆகியவற்றில் மக்களுக்கு எது சிறந்தது என்று புரியாமல் திண்டாடுகின்றனர்.
வெள்ளை சர்க்கரை, பிரவுன் சர்க்கரை மற்றும் வெல்லம் அனைத்தையும் கரும்பிலிருந்து உருவாக்குகின்றனர் என்ற தகவலுக்கு உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூறும்போது, "வெள்ளைச் சர்க்கரை என்பது கரும்புச் சாற்றில் இருந்து, வெல்லப்பாகு எடுத்து, அதை இறுதியில் சுத்திகரித்துத் தயாரிப்பார்கள்.
"நாட்டுச் சர்க்கரையும் இதுபோல் சுத்திகரிக்கப்படுகிறது, ஆனால் வெல்லப்பாகு தனித்
தனியாகச் சேர்க்கப்பட்டு இந்த வகை சர்க்கரையைத் தயாரிக்கின்றனர். இருப்பினும், வெல்லத் தைத் தயாரிக்கும்போது அதைச் சுத்திகரிக்க மாட்டார்கள். அதனால்தான் அதன் ஊட்டச்சத்து பண்புகள் சற்று வித்தியாசமாக இருக்கின்றன," என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
கலோரிகளைப்பற்றி பேசுகையில், "நீங்கள் ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை/ நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் எடுத்துக் கொண்டாலும் அவை அனைத்தும் ஒரே கலோரிகளை வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
"இருப்பினும் வெள்ளை அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் ஒப்பிடுகையில், வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் வெள்ளை அல்லது நாட்டுச் சர்க்கரையை விட வெல்லமே சிறந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.

